பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

மக்சீம் கார்க்கி


என்ற முறையில் நான் அவனிடம் கொண்டிருந்த பாசம் செத்ததா? அல்லது அவனது கருத்துக்களைப் பற்றியும் சேவையைப் பற்றியும் உள்ள என் நினைவு செத்ததா? அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறைந்ததா? நேர்மையும் துணிவும் கொண்ட மனிதன் என்று அவனை நான் உணர்ந்திருந்த என் அறிவு மறைந்ததா? இவையெல்லாம் செத்தா போயின? என்னைப் பொறுத்தவரை அவை என்றும் சாகாதவை என்பது எனக்குத் தெரியும். ஒரு மனிதனை ‘அவன் செத்துவிட்டான்’ என்று சொல்லும் போது மிகவும் அவசரப்பட்டே கூறி விடுகிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவனது உதடுகள்தான் செத்துப்போயின, ஆனால் அவன் உரைத்த வாசகங்கள் இன்னும் வாழ்பவர்களின் இதயங்களிவெல்லாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்!”

“தோழர்களே! நான் சொல்வது முட்டாள்தனமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், நான் நேர்மையான மனிதர்களின் சிரஞ்சீவித் தன்மையில், என்னை இந்த மாதிரியான அற்புத வாழ்க்கையில் ஈடுபடுத்தியவர்களின் சிரஞ்சீவித் தன்மையில் நம்பிக்கை கொள்கிறேன். அவர்கள் கற்றுக் கொடுத்த இந்த வாழ்க்கை தனது பிரமிக்க வைக்கும் பிரச்சினைகளால், வகைவகையான காட்சிகளால், கருத்துக்களின் வளர்ச்சியால் என்னைப் புல்லரித்துப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது. இந்தக் கருத்துக்களின் வளர்ச்சி என்னுடைய சொந்த இதயத்தைப் போல் எனக்கு அத்தனை அருமை வாய்ந்ததாயிருக்கிறது. ஒரு வேளை நாம் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழலாம்! நாம் சிந்தனைகளுக்கே அடிமைப்பட்டு வாழ்கிறோம். அதனால் அந்தச் சிந்தனை நம்மைப் பாதித்து உருக்குலைத்துவிடும். எதையுமே நாம் உணர்ச்சியற்று மதிப்பிடுகிறோம்....”

“உங்களிடம் ஏதோ அருமையான மாறுதல் ஏற்பட்டிருப்பது போலத் தோன்றுகிறதே” என்று புன்னகையுடன் கேட்டாள் சோபியா.

“ஆமாம்” என்றாள் சாஷா, “ரொம்பவும் அருமையானதுதான். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் - நிகலாய் வெஸோவ்ஷிகோவோடு நேற்றிரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு எப்போதுமே அவனைப் பிடித்ததில்லை. அவன் முரட்டுத்தனமும் அறியாமையும் கொண்டவனாகவே எனக்குத் தோன்றினான். சந்தேகமின்றி அவன் அப்படித்தானிருந்தான். எல்லோர் - மீதும் அவனுக்கு ஓர் அசைவற்ற மோசமான எரிச்சல் உணர்ச்சியே ஏற்பட்டு வந்தது. எப்போது பார்த்தாலும், எந்த விஷயத்தை எடுத்தாலும் அவன் தன்னை வைத்தே, தன்னைத்தானே முன்னிலையில் வைத்துப் பேசுவான். எப்போது பார்த்தாலும் ‘நான், நான், நான்’ என்று