பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

மக்சீம் கார்க்கி


"அவன் சொல்வது உண்மையென்றால், நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பார்க்க வேண்டியதுதான், முயல்வது நம் கடமை!”

திடீரென அவளது முகம் சிவந்தது. ஒன்றுமே பேசாமல் நாற்காலிக்குள் உட்கார்ந்து போனாள்.

“அடி கண்ணே! என்று சிறு புன்னகை ததும்பு, தன்னுள் நினைத்துக் கொண்டாள் தாய். சோபியாவும் புன்னகை புரிந்தாள். நிகலாய் சாஷாவைப் பார்த்தாள். லேசாகச் சிரித்துக்கொண்டான். அந்தப் பெண் தன் தலையை நிமிர்த்தினாள். கடுமையாக எல்லோரையும் பார்த்தாள், அவளது முகம் வெளுத்து, கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவளது குரல் மிகவும் அவமானத்தால் வறண்டு ஒலித்தது

“நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றாள் அவள். “நான் ஏதோ சொந்தக் காரணத்துக்காகத்தான் இதைச் செய்யச்சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.”

“ஏன் சாஷா?” என்று பாசாங்குடன் கேட்டுக்கொண்டே எழுந்து அவளிடம் சென்றாள் சோபியா, இப்படிச் சொன்னது சாஷாவின் மனத்தைத் துன்புறுத்திவிட்டது என்றே தாய்க்குத் தோன்றியது. சோபியா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்றே தாய் கருதினாள், தாய் பெருமூச்செறிந்தாள். குற்றம் கூறும் பாவத்தோடு அவளைப் பார்த்தாள்,

“இந்தப் பிரச்சினையில் நான் எந்தச் சம்பந்தமும் கொள்ளத் தயாராயில்லை!” என்றாள் சாஷா. “நீங்கள் இந்தப் பிரச்சினையை என் சொந்த விவகாரமாகக் கருதினால், அதைப் பற்றிய முடிவுக்கு வருவதில் நான் கலந்துகொள்ளவே மாட்டேன்!”

“போதும், சாஷா” என்று அமைதியாகச் சொன்னான் நிகலாய்.

தாயும் அவளருகே சென்று, அவனது தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். அந்தப் பெண் அவளது கரத்தை எட்டிப் பிடித்தாள்; கன்றிச் சிவந்து போன தன் முகத்தைத் தாயின் முகத்துக்கு நேராக நிமிர்த்தினாள். பேசுவதற்கு வாய் வராததால், தாய் லேசாகப் புன்னகை செய்தாள்; பெருமூச்செறிந்தாள். சாஷாவுக்கு அடுத்தாற்போலிருந்த நாற்காலியில் சோபியா உட்கார்ந்தாள்; தன் கரத்தை சாஷாவின் தோள் மீது சுற்றிப்போட்டாள்.

“நீ ஒரு விசித்திரப் பிறவி” என்று அவளது கண்களையே பார்த்துப் புன்னகை செய்தவாறே சொன்னாள் சோபியா.

‘நான்தான் அசட்டுத்தனமாய் நடந்து கொண்டுவிட்டேன்....”

“நீங்கள் என்ன, இப்படி நினைக்கிறீர்கள்?” என்று சோபியா பேச முளைந்தாள்; ஆனால் அவள் பேச்சை முறித்துக் குறுக்கிட்டுப் பேசினான் நிகலாய்: