பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

357


தொங்கவிட்டு, தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல், வாய்ச் சொல்லைத் தவிர எந்தவித ஆயுதமுமற்ற மக்களைக் கண்டு பயந்து நடுங்கும் அதிகாரிகளை நோக்கிக் குத்தலாகப் பேசினார்கள். மக்களது காலடியிலே காற்றினால் பறந்துவந்து விழுந்த பழுத்து வதங்கிய இலைகள் பரவிக்கிடந்த தெருவின் சாம்பல் நிறச் சரளைகளின் மீது இலையுதிர்காலத்தின் வெளிறிய நீலவானம் பளபளத்து ஒளிர்ந்தது.

தாய் கூட்டத்தினிடையே நின்று, தன்னைச் சுற்றியுள்ள பரிச்சயமான முகங்களைக் கண்டு வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.

“நீங்கள் ஒன்றும் அதிகம்பேர் வரவில்லை. தொழிலாளர்களே ரொம்ப ரொம்பக் குறைச்சல்.....”

கதவுகள் திறந்தன, சிவப்பு நாடாக்களால் கட்டப்பெற்ற மலர் வளையங்கள் சுற்றிய சவப்பெட்டியின் மேற்பகுதியைச் சிலபேர் வெளியே கொண்டுவந்தார்கள். குழுமி நின்ற ஜனங்கள் உடனே தங்கள் தொப்பிகளை அகற்றி அதற்கு மரியாதை செலுத்தினார்கள்; அவர்கள் செய்த இந்தச் செய்கை ஒரு பறவைக்கூட்டம் திடீரென கணத்தில் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்குவதுபோலத் தோன்றியது. சிலந்த முகத்தில் கறுத்த பெரிய மீசைகொண்ட ஒரு நெட்டையான போலீஸ் அதிகாரி விறுவிறென்று கூட்டத்தினரை நோக்கி நடந்துவந்தான். அவனுக்குப் பின்னால் ஜனங்களைப் பிளந்து தள்ளிக்கொண்டும், தங்களது பூட்ஸ் கால்களை ஓங்கி மிதித்துக்கொண்டும் சிப்பாய்கள் சிலர் வந்தார்கள்.

“அந்த நாடாக்களைத் தூர எடு!” - என்று கரகரத்த குரலில் உத்தரவிட்டான் அந்த அதிகாரி.

ஆணும் பெண்ணும் அவளைச் சுற்றி நெருங்கிச் சூழ்ந்தார்கள், ஆத்திரத்தோடு பேசினார்கள்: தங்கள் கைகளை அசைத்து வீசி ஒருவரையொருவர் முண்டியடித்து முன்னேறினார்கள். தாயிள் கண் முன்னால் உணர்ச்சிவசப்பட்டு வெளுத்துப்போன முகங்களும் துடிதுடிக்கும் உதடுகளும் பிரகாசித்தன, ஒரு பெண்ணின் கன்னங்களில் அவமானத்தால் ஏற்பட்ட கண்ணீர் பொங்கி வழிந்து உருண்டோடியது.

“அடக்குமுறை ஒழிக!” என்று ஒரு இளங்குரல் கோஷமிட்டது. எனினும் அந்தக் கோஷம் அங்கு நடந்துகொண்டிருந்த வாக்குவாதத்தில் அமிழ்ந்து அடங்கிவிட்டது.

தாயின் உள்ளத்தில் சுருக்கென்று வேதனை தோன்றியது. அவள் தனக்கு அடுத்தாற்போல் நின்றுகொண்டிருந்த எளிய உடைதரித்த இளைஞனைப் பார்த்தாள்.