பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

359


பாராக் கொடுத்து உலாவிக்கொண்டிருந்தார்கள். தாய் நடைபாதை வழியாக நடந்து வந்தாள். அவளால் இப்போது சவப்பெட்டியைக்கூடக் காண முடியலில்லை. அந்தச் சவப்பெட்டியைச் சுற்றிலும் தெரு முழுவதுமே முன்னும் பின்னும் ஜனத்திரள் பெருகி வந்தது. சாம்பல் நிறம் படைத்த குதிரைப் போலீஸ்காரர்கள் பின்புறத்திலும் வந்துகொண்டிருந்தார்கள், ஆனால் அதே சமயம் இருமருங்கும் போலீஸ்காரர்கள் தங்களது உடைவாளின் கைப்பிடியில் கைகளைப் போட்டவாறே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் துப்பறிபவர்களின் கூரிய கண்கள் ஜனங்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே வருவதைத் தாய் கண்டாள்.

சென்று வாராய், தோழனே!
சென்று வாராய், தோழனே!

என்று இருசோகக் குரல்கள் பாடின.

“பாட்டில்லாமலே போகலாம்” என்று யாரோ கத்தினார்கள், “பெரியோர்களே, நாம் மௌனமாகவே செல்வோம்.”

அந்தக் குரலில் ஏதோ ஓர் உறுதியும் அழுத்தமும் இருந்தது. அந்தச் சோக கீதம் திடீரென்று நின்றது; பேச்சுக்குரல் அடங்கியது. சரளைக் கற்கள் பாவிய தெருவில் ஒரே கதியில் செல்லும் மங்கிய காலடியோசை மட்டுமே கேட்டது. இந்த ஓசை ஜனங்களுக்கு மேலாக எழுந்து நிர்மலமான வானமண்டலத்தில் மிதந்து. எங்கோ தூரத்தொலைவில் பெய்யும் புயல் மழையின் இடியோசையைப் போல், காற்றை நடுக்கி உலுக்கியது. ஒரு பலத்த குளிர்காற்று உரத்து வீசி. தெருப்புழுதியையும் குப்பை கூளங்களையும் வாரியள்ளி ஜனங்களின் மீது எரிச்சலோடு வீசியெறிந்தது. அவர்களது தலைமீதும், சட்டை துணிமணிகள் மீதும் வீசியடித்து கண்களை இறுக மூடச்செய்தது. மார்பில் ஓங்கியறைந்தது; காலைச்சுற்றி வளைத்து வீசியது.....

அந்த மௌன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. அந்த ஊர்வலமும், ஊர்வலத்தில் தோன்றிய சிந்தனை தோய்ந்த முகங்களும், நெரிந்த நெற்றிகளும் தாயின் உள்ளத்தில் பயங்கர உணர்ச்சியை நிரப்பின. மெது மெதுவாகப் பல சிந்தனைகள் அவள் மனத்தில் வட்டமிட்டன. அந்தச் சிந்தனைகளை அவள் சோகம் தோய்ந்த வார்த்தைகளால் பொதிந்து தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை....”

அவள் குனிந்த தலையோடு நடந்து சென்றாள். அவர்கள் இகோரைப் புதைக்கச் செல்வதாகவே அவளுக்குத் தோன்றவில்லை.