பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

361


"நான் ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறிமுடித்துவிடுகிறேன்” என்று அந்த இளைஞன் அமைதியாகச் சொன்னான். பிறகு பேசத் தொடங்கினான்: “தோழர்களே! நம்முடைய நண்பனும் நல்லாசிரியனுமாக விளங்கிய இந்தத் தோழனின் சமாதியருகே நாம் ஒரு பிரதிக்ஞை செய்வோம். அவனது கொள்கைகளை நாம் என்றும் மறக்கமாட்டோம். நாம் அனைவரும், நம்மில் ஒவ்வொருவரும் நமது தாய்நாட்டின் சீர்கேட்டுக்கெல்லாம் மூலகாரணமான இந்தத் தீமையை, இந்த அடக்குமுறை ஆட்சியை, ஏதேச்சாதிகார ஆட்சியை சவக்குழி தோண்டிப் புதைப்பதற்கே நமது ஆயுட்காலம் முழுவதும் என்றென்றும் இடையறாது, போராடிப் பாடுபடுவோம்!”

“அவனைக் கைது செய்!” என்று அதிகாரி கத்தினான்; ஆனால் அவனது குரல் அப்போது எழுந்த கோக்ஷப் பேரொலியில் முங்கி முழுகிவிட்டது.

“ஏதேச்சதிகாரம் அடியோடு ஒழிக!”

போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தைப் பிளந்துகொண்டு அந்தப் பிரசங்கியை நோக்கிச் சென்றார்கள். அவனோ தன்னைச் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி நின்று தனக்குப் பாதுகாப்பளித்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்துக்கு மத்தியிலிருந்து கைகளை வீசி ஆட்டிக் கோஷமிட்டான்.

“சுதந்திரம் நீடூழி வாழ்க!”

தாய் ஒரு புறமாக நெருக்கித் தள்ளப்பட்டாள். அவள் பயத்தால் ஒரு சிலுவையின் மீது போய்ச் சாய்ந்து ஏதோ ஓர் அடியை எதிர்நோக்கி கண்களை மூடி நின்றாள். குழம்பிப்போன குரலோசை அவளது காதுகளைச் செவிடுபடச் செய்தது. பூமியே அவளது காலடியை விட்டு அகன்று செல்வதாக ஒரு பிரமை. பயத்தினால் அவளுக்கு மூச்செடுக்கவே முடியாமல் திக்கு முக்காடியது. போலீஸ் விசிலின் சப்தம் ஆபத்தை அறிவித்து ஒலித்தது: முரட்டுக் குரல்கள் உத்தரவு போட்டன; பெண்களின் கூச்சல் பீதியடித்துக் கதறின; வேலிக் கம்பிகள் முறிந்து துண்டாயின, கனத்த பூட்ஸ்காலடிகள் வறண்ட பூமியில் ஓங்கியறைந்து ஒலித்தன. இந்தக் களேபரம் அதிக நேரம் நீடித்தது; எனவே அவள் இந்தப் பயபீதியால் அஞ்சி நடுங்கிப்போய் கண்களை மூடியவாறே அதிக நேரம் நின்றுகொண்டிருக்க இயலவில்லை.

அவள் ஏறிட்டுப் பார்த்தாள்; கூச்சலிட்டுக்கொண்டும் தன் கைகளை முன்னே நீட்டிக்கொண்டும் பாய்ந்து ஓடினாள். கொஞ்ச தூரத்தில், சமாதிக் குழிகளுக்கு இடையேயுள்ள குறுகிய சந்தில், போலீசார் அந்த நீண்ட-