பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

மக்சீம் கார்க்கி


கேசமுடைய இளைஞனைச் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக நாலாபுறத்திலிருந்தும் சாடி முன்னேறி வரும் ஜனங்களை அடித்து விரட்டிக்கொண்டிருந்தார்கள். உரிய வாள்கள் மனிதத் தலைகளுக்கு மேலாகப் பளபளத்து மின்னி, திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் குதித்துப் பாய்ந்தன. ஒடிந்த வேலிக் கம்பிகளும், கம்புகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கூச்சலிடும் ஜனங்கள் வெளுத்த முகமுடைய அந்த இளைஞனைச் சுற்றிலும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு குமைந்து கூடினார்கள். இந்த வெறியுணர்ச்சிக் களேபரப்புயலுக்கு மத்தியில் அந்த இளைஞனது பலம் வாய்ந்த குரல் ஓங்கி ஒலித்தது:

“தோழர்களே! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள்?”

அவனது வார்த்தைகள் தெளிவு தருவனவாக ஒலித்தன. “ஜனங்கள் தங்கள் கைகளிலிருந்த கழிகளையும் கம்புகளையும் விட்டெறிந்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் தாயோ ஏதோ ஒரு தடுக்க முடியாத சக்தியால் தூண்டப்பெற்று முன்னோக்கி முண்டிச் சென்றுகொண்டிருந்தாள். பின்னால் சரிந்துபோன தொப்பியோடு நிகலாய் இவானவிச் அந்த வெறிகொண்ட ஜனக்கூட்டத்தை விலக்கித் தள்ளிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள்.

“உங்களுக்கு என்ன பைத்தியமா? அமைதியாயிருங்கள்!” என்று கத்தினான் அவன்.

அவனது ஒரு கை செக்கச் சிவந்து காணப்படுவதாகத் தாய்க்குத் தோன்றியது.

‘நிகலாய் இவானவிச் இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அவனை நோக்கி ஓடிக்கொண்டே கத்தினாள் தாய்.

“நீங்கள் எங்கே போகிறீர்கள்? அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்!”

அவளது தோள்மீது ஒரு கரம் விழுந்தது திரும்பினாள்; அவளுக்கு அடுத்தாற்போல் தலையிலே தொப்பியற்றுக் கலைந்துபோன தலைமயிரோடு சேர்பியர் நின்றுகொண்டிருந்தாள்; அவள் ஒரு பையனைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள், அந்தப் பையன் இன்னும் வாலிப வயதை எட்டிப்பிடிக்காத, பால்மணம் மாறாதவனாயிருந்தான், அவன் தன் முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, துடி துடிக்கும் உதடுகளால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

“என்னைப் போகவிடுங்கள்...... எனக்கு ஒன்றுமில்லை......”