பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

363


“இவனைப் பார்த்துக்கொள்ளுங்கள், நம் வீட்டுக்குக் கொண்டு போங்கள். இதோ கைக்குட்டை; அவன் முகத்தில் ஒரு கட்டுப்போடுங்கள்” என்று படபடத்துக் கூறினாள் சோபியா. பிறகு அவள் அந்தப் பையனின் கையைத் தாயின் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டு ஓடினாள். ஓடும்போதே சொன்னாள்:

“சீக்கிரமாகப் போய்விடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைக் கைது செய்துவிடுவார்கள்!”

இடுகாட்டின் நாலாபுறங்களிலும் ஜனங்கள். சிதறியடித்து ஓடினார்கள்; போலீஸ்காரர்கள் சமாதி மேடுகளின் மேலெல்லாம் ஏறிக் குதித்து ஓடினார்கள். அவர்களது நீண்ட சாம்பல் நிறச்சட்டைகள் முழங்கால்வரையிலும் தொங்கி, முட்டிக் கால்களைத் தட்டின; அவர்கள் தங்கள் வாள்களைச் சுழற்றிக் கொண்டும், வாய்க்கு வந்தபடி சத்தமிட்டுக்கொண்டும் தாவித் தாவிப் பின் தொடர்ந்தார்கள். அந்தப் பையன் அவர்களை உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.

“சீக்கிரம், சீக்கிரம், புறப்படு” என்று அவனது முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே கத்தினாள் தாய்.

“என்னைப்பற்றிக் கவலைப்படாதே இது ஒன்றும் வலிக்கவில்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் வாயிலிருந்த ரத்தத்தைக் கக்கினான். “அவன் வாளின் கைப்பிடியால் என்னை ஓர் அடிகொடுத்தான். ஆனால் பதிலுக்கு என்னிடம் அவனும் வாங்கிக் கட்டிக்கொண்டான். நான் ஒரு கழியினால் அவனை ஒரு விளாசு விளாசினேன்; பயல் கதறி ஊளையிட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்", என்று அவன் தனது ரத்தம் தோய்ந்த முஷ்டியை உலுக்கியாட்டிக்கொண்டே கத்தினான். “வரப்போகிற சண்டையை நினைத்துப் பார்த்தால், இது என்ன பிரமாதம்? நாங்கள் - தொழிலாளர்களாகிய நாங்கள் அனைவரும் கிளர்ந்தெழும்போது, உங்களையெல்லாம் - சண்டை போடாமலே துடைத்துத் தூர்த்துவிடுகிறோம்!”

“புறப்படு சீக்கிரம்!” என்று அவனை அவசரப்படுத்திக்கொண்டே இடுகாட்டின் வேலிப்புறமாகவுள்ள சிறு வாசலை நோக்கி நடந்தாள் தாய். வெளியேயுள்ள பரந்த வயல்வெளியில் போலீஸ்காரர்கள் பதுங்கிக் காத்திருந்து, ஜனங்கள் இடுகாட்டைவிட்டு வெளியே வந்ததும், பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அந்த வாசலுக்கு வந்ததும், ரொம்பவும் ஜாக்கிரதையோடு இலையுதிர் காலத்தின் இருள் போர்வை போர்த்திருந்த-