பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

21


செத்தொழிந்து தேய்ந்து போன பழைய இளமைக் கால சிந்தனைகளை நினைவுக்குக் கொண்டுவந்தன. வாழ்க்கையின் மறைந்து போன மங்கலான அதிருப்தி உணர்வுகள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தன. அப்போது அவன் தன் தோழிமாரோடு வாழ்க்கையைப் பற்றி, அனைத்தையும் பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறாள். ஆனால் அவளது தோழிகளும், ஏன் அவளும் கூட, தங்களது வாழ்க்கையின் துன்ப துயரங்களைப் பற்றிக் குறைப்பட்டுத்தான் பேசிக் கொண்டார்களேயன்றி, அதற்குரிய காரணத்தை ஆராய முனையவில்லை. ஆனால் இப்போதோ அவளது மகன் அவளெதிரே உட்கார்ந்திருந்தான். அவனது கண்களும் முகமும் பேச்சும் வெளியிடுவதெல்லாம் அவனது இதயத்தின் அடித்தளத்தையே தொட்டன. தன் தாயின் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து, அவளது துன்ப துயரங்களைப் பற்றி அவளிடமே அனுதாபத்தோடு பரிந்து பேசும் தன் மகனைக் கண்டு அவளது மனத்தில் பெருமை உணர்ச்சி நிரம்பித் ததும்பியது.

ஆனால் தாய்மார்கள் என்றும் அனுதாபத்துக்குரியவராகவே ஆவதில்லை.

அதுவும் அவளுக்குத் தெரியும். அவன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னவை அனைத்தும் கசப்பான எனினும் ஊரறிந்த உண்மைகள்தான். எனினும், அவளது இதயத்தில் பலவிதமான உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்து. இயல்புக்கு மீறிய அன்போடு இதம் செய்து சுகமூட்டுவதாகத் தோன்றியது.

“நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்?” என்று அவனது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டாள் அவள்


“முதலில் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்: பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்!”

உறுதியும் அழுத்தமும் நிறைந்த அவனது நீலக் கண்களில் அப்போது மென்மையும் அன்பும் கலந்த ஒரு ஒளி நிறைந்திருப்பதைக் காண, அவளுக்குக் குதூகலமாயிருந்தது. அமைதி நிறைந்த இளம் புன்னகை அவளது இதழ்களில் நெளிந்தது. எனினும் அவளது கன்னச் சுருக்கங்களில் கண்ணீர்த் திவலைகள் இன்னும் துடிதுடித்துக் கொண்டுதானிருந்தன. வாழ்க்கையின் கசப்பைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்ட தன் மகனைப் பற்றிய அவளது பெருமை உணர்ச்சி