பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

365


அவன் தன் கையைத் தன் முகத்துக்குக் கொண்டுபோனான். அந்தக் கட்டை அலைத்து அவிழ்க்கச் சக்தியற்று மீண்டும் தன் கையை மடிமீது நழுவவிட்டான். இருந்தாலும் அந்தக் கட்டோடேயே அவன் முணுமுணுத்துப் பேசத் தொடங்கினான்:

“அருமைப் பயல்களா, இதை மட்டும் நான் மறந்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்..... முன்னால் தித்தோவிச் என்ற ஒரு மாணவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார்.... அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடம் சொன்னார்.... பிறகு அவர்கள் அவரையும் கைது செய்துவிட்டார்கள்......”

தாய் இவானைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, அவனது தலையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். திடீரென அந்தப் பையன் கிறங்கி விழுந்து மௌனமாகிக்கிடந்தான். பயபீதியால் செய்வது இன்னதென்று அறியாமல் திகைத்தாள் தாய். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்துக்கொண்டாள். எங்கோ ஒரு மூலையிலிருந்து கிளம்பி, போலீஸ்காரர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் ஓடோடியும் வந்து, இவானின் கட்டுப்போட்ட தலையைப் பிடித்து இழுத்துப்போட்டு அவனைக் கொல்லப் போவதாகத் தோன்றியது.

“குடித்திருக்கிறானா?” என்று வண்டிக்காரன் தன் இடத்தைவிட்டுத் திரும்பி புன்னகை செய்துகொண்டே கேட்டான்.

“ரொம்ப ரொம்பக் குடித்துவிட்டான்!” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

“இது யார் உங்கள் மகனா?”

“ஆமாம். ஒரு செருப்புத் தொழிலாளி, நான் ஒரு சமையற்காரி.”

“கஷ்டமான வாழ்க்கைதான், இல்லையா?”

அவன் தன் சாட்டையை ஒரு சுண்டுச் சுண்டி வாங்கினான். மீண்டும் அந்த வண்டிக்காரன் திரும்பவும் பேசினான்:

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இடுகாட்டில் நடந்த கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அவர்கள் யாரோ ஓர் அரசியல்வாதியை, அதிகாரிகளுக்கு எதிராக வேலை செய்த ஓர் அரசியல்வாதியைப் புதைக்கச் சென்றார்கள் போலிருக்கிறது. அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சண்டை. அந்த அரசியல்வாதியைச் சேர்ந்த நண்பர்கள்தாம் அவனைப் புதைக்கப் போனார்களாம். அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள், ‘மக்களை ஏழைகளாக்கும் அதிகாரிகள் ஒழிக’ என்று அவர்கள் கத்தினார்களாம். உடனே போவீஸார்