பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

மக்சீம் கார்க்கி


வந்து, அவர்களை அடிக்கத் தொடங்கினார்களாம். சிலர் படுகாயம் அடைந்ததாகக் கூடச்சொல்லிக்கொள்கிறார்கள், போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்ததாம்!” அவன் ஒரு கணநேரம் மௌனமாயிருந்தான். பிறகு விசித்திரமான குரலில், வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டே பேசத்தொடங்கினான். “செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!”

வண்டிச் சரளைக் கற்களில் ஏறி விழும்போது, இவானின் தலை தாயின் மார்போடு மெதுவாக மோதிக்கொண்டது. வண்டிக்காரன் பெட்டியில் பாதி திரும்பியவாறு உட்கார்ந்து ஏதேதோ பேசி வந்தான்:

“ஜனங்களுக்குப் பொறுமையின்மை ஏற்பட்டுவிட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம்தான் தலைதூக்கி வருகிறது. நேற்று ராத்திரி என் அடுத்த வீட்டுக்காரன் வீட்டுக்குப் போலீஸார் வந்து; விடியும்வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் சோதனை போட்டார்கள். அப்புறம் ஒரு கொல்லுலைத் தொழிலாளியைத் தங்களோடு கொண்டுபோய்விட்டார்கள். அவனை இரவு வேளையிலே ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள், அந்தக் கொல்லன் ரொம்ப நல்லவன்.”

“அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் தாய்.

“அந்த கொல்லன் பேரா? சவேல். சவேல் எல்சென்கோ, சிறு வயசுதான். இருந்தாலும். அவனுக்கு நிறைய விஷயம் தெரியும்.. விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே இங்கே அனுமதி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. அவன் எங்களிடம் வந்து பேசுவான்: ‘வண்டிக்காரர்களே! உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது?’ என்பான். ‘உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் வாழ்க்கை நாயினும் கேடான வாழ்க்கைதான்’ என்று நாங்கள் சொல்லுவோம்.”

“நிறுத்து” என்றாள் தாய்

வண்டி நின்றதால் ஏற்பட்ட குலுங்கலில் இவான் விழித்துக்கொண்டு லேசாக முனகினான்.

“விழித்துக்கொண்டானா?” என்றான் வண்டிக்காரன்; “தம்பி, ஓட்கா வேணுமா, ஓட்கா!”

மிகுந்த சிரமத்தோடு இவான் நடந்துகொண்டே, தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தாயை நோக்கிச் சொன்னான்.

“பரவாயில்லை. என்னால் முடியும்.”