பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

367



13


சோபியா அதற்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்துவிட்டாள். அவள் உத்வேகமும் குழப்பமும் கொண்டவளாகத் தோன்றினாள்; அவளது பற்களுக்கிடையில் ஒரு சிகரெட் இருந்தது.

அவர்கள் இந்தக் காயமுற்ற பையனை ஒரு சோபாவிலே படுக்கப்போட்டார்கள். பிறகு அவள் லாகவமாக அவனது கட்டை அவிழ்த்து சிகரெட் புகை கண்ணில் படியாதபடி கண்ணைச் சுருக்கி விழித்துக் கொண்டே உத்தரவிட்டுக்கொண்டிருந்தாள்.

“இவான் தனீலவிச்! அவனை இங்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நீலவ்னா, களைத்துப் போய்விட்டீர்களா? பயந்துவிட்டீர்களா? சரி, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நிகலாய்! நீலவ்னாவுக்கு ஒரு கிளாஸ் ஒயின் கொடு.”

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் அனுபவித்த சங்கடத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் தாயை வாட்டிக்கொண்டிருந்தது. அவளுக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. நெஞ்சில் குத்தலான வேதனை எடுத்தது.

“என்னைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராதே” என்று அவள் முனகினாள். என்றாலும் அவளது உடல் முழுவதும் யாருடைய பணிவிடையையாவது எதிர்நோக்கித் தவித்தது. அன்பாதரவின் சுகத்தை நாடியது.

அடுத்த அறையிலிருந்து நிகலாய் கட்டுப்போட்ட கையோடு வந்து சேர்ந்தான். அவனோடு டாக்டர் இவான் தனீல்விச்சும் முள்ளம் பன்றியைப்போல் சிலிர்த்துக் கலைந்த தலைமயிரோடு வெளி வந்தார். விறுட்டென்று இவானின் பக்கம் ஓடிச்சென்று அவனைக் குனிந்து பார்த்தார்.

“தண்ணீர்!” என்றான் அவன். “நிறையத் தண்ணீர் கொண்டுவா. அத்துடன் கொஞ்சம் பஞ்சும், சுத்தமான துணியும் கொண்டுவா.”

தாய் சமையலறையை நோக்கி நடந்தாள். ஆனால் அதற்குள் நிகலாய் அவளது கையைப் பிடித்து அவளைச் சாப்பாட்டு அறைக்குள்ளே அழைத்துச் சென்றான்.

“அவன் சொன்னது சோபியாவிடம், உங்களிடமல்ல” என்று மெதுவாகக் கூறினான் அவன். “ரொம்பவும் நிலைகுலைந்து போய்விட்டீர்கள் என்று அஞ்சுகிறேன். அப்படியா, அம்மா?”

அவனது அன்பு ததும்பும் ஆர்வம் நிறைந்த கண்களைக் கண்டதும். தாயினால் தனது பொருமலை அடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை.