பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

மக்சீம் கார்க்கி


படுத்தவாறே, அந்தக் குரல்களின் உள்ளடங்கிய முணுமுணுப்பைக் சேட்டாள்; தன்னை மறந்து ஒரு பயபீதி உணர்ச்சிக்கு அவள் அடிமையானாள்.

அன்றைய தினம் முழுவதுமே அவளுக்கு ஒரே புரியாத இருள் மண்டலமாகவும், தீய சொரூபமாகவும் தோன்றியது. ஆனால் அதைப்பற்றி அவள் சிந்திக்க விரும்பவில்லை. தனது மனத்தை அலைக்கழிக்கும் எண்ணங்களை உதறித் தள்ளிக்கொண்டே, அவள் தன் சிந்தனையையெல்லாம் பாவெலை நோக்கித் திருப்பினாள். அவன் விடுதலைபெற்று வருவதைப் பார்க்க அவள் ஆவல் கொண்டாள். ஆனால் அதே சமயத்தில் அவள் பயப்படவும் செய்தாள். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களெல்லாம் ஓர் உச்ச நிலைக்கு ஆரோகணித்துச் சென்றுகொண்டிருப்பதா அவள் உணர்ந்தாள்; அந்த உச்ச நிலையில் ஏதோ ஒரு பெரும் மோதல் ஏற்படும் என்ற பயமும் அவளுக்கு எழுந்தது. ஜனங்களின் மெளனம் நிறைந்த சகிப்புத்தன்மை எதற்காகவோ விழிப்போடு காத்து நிற்கும் பரபரப்புக்கு இடம் கொடுத்தது. அவர்களது உத்வேகம் நன்கு மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொருவரும் கூரிய வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டாள். எல்லாமே பொறுமையிழந்து புழுங்குவதாக உணர்ந்தாள். ஒவ்வொரு அறிக்கை வெளிவரும்போதும், சந்தையிலும், கடைகளிலும், வேலைக்காரர்களிடமும் தொழில் சிப்பந்திகளிடமும் உத்வேகமான வாதப் பிரதிவாதங்கள் கிளம்பி ஒலிப்பதைக் கேட்டாள். ஒவ்வொருவர் கைதியாகும்போதும், மக்களிடையே அந்தக் கைதுக்குரிய காரணத்தைப்பற்றிப் பயமும் லியப்பும் தன்னுணர்வற்ற அனுதாப வார்த்தைகளும் பரிமாறப்பட்டன. ஒரு காலத்தில் அவளை எவ்வளவோ பயமூட்டிய வார்த்தைகளை இன்று சாதாரண மக்களே பிரயோகித்துப் பேசுவதையும் அவள் கேட்டாள்; எழுச்சி, சோஷலிஸ்டுகள், அரசியல் முதலிய வார்த்தைகள், அவர்கள் அந்த வார்த்தைகளை ஏளன பாவத்தோடு சொன்னாலும், அந்த ஏளன பாவத்துக்குப் பின்னால் ஒரு தனி குறுகுறுப்புணர்ச்சியும் தொனித்தது; குரோத உணர்ச்சிக்குப் பின்னால் பய உணர்ச்சியும் தொனித்தது. அந்த வார்த்தைகளை அவர்கள் சிந்தனை செப்பட்டவாறு பேசும்போது, அந்தச் சிந்தனையில் நம்பிக்கையும் பயமுறுத்தலும் நிறைந்து ஒலித்தன. அவர்களது அசைவற்ற கட்டுக்கிடையான இருண்ட வாழ்க்கைத் தடாகத்தில் வட்ட வட்டமாக அலைகள் பெருகி விரிந்தன. தூங்கி விழுந்த சிந்தனைகள் துள்ளியெழுந்து விழிப்புற்றன. அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளும் அமைதி கலகலத்துச் சிதற ஆரம்பித்தது. இந்த மாறுதல்களையெல்லாம் அவள்