பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மக்சீம் கார்க்கி


ஒரு புறம்; மற்றவர்கள் பேசுவதற்கு மாறாக அவன் பேசுவது, அவன் உட்பட்ட இச்சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பழகிக் காய்த்துப்போன வாழ்க்கையை எதிர்த்து அவன் தன்னந்தனியனாகப் போராட்ட முனைந்து நிற்பது. அவன் இன்னும் இளைஞனாக இருப்பது— முதலிய விஷயங்களால் ஏற்பட்ட அவளது நிதான புத்தி ஒரு புறம்: இவ்வித இரு உணர்ச்சிகளுக்கிடையிலகப்பட்டு அவள் தடுமாறினாள். எனவே, அவள் அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட நினைத்தாள்.

“கண்ணே, நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட, முடியும்?”

ஆனால், திடீரென்று, சற்றே அன்னியனாக, ஆனால் பெரும் அறிவாளியாகத் தன் முன்னே தோன்றும் மகனைப் பற்றிய பரவசத்திலிருந்து விடுபட அவள் விரும்பலில்லை.

பாவெல் தன் தாயின் இதழ்களில் தோன்றிய புன்னகையை, அவளது முகத்தில் தெரிந்த கவன உணர்வை அவளது கண்களில் மிதந்த அன்பை —எல்லாம் கண்டான். உண்மையை அவள் உணர வைத்துவிட்டோம் என்று தோன்றியது. தனது வார்த்தைகளின் சக்தியால் ஏற்பட்ட இளமைப் பெருமிதம் அவனுக்குத் தன் மீதுள்ள நம்பிக்கை! வெகுவாக உயர்த்தியது. அவன் சிரித்துக்கொண்டும், முகத்தைச் சுழித்துக் கொண்டும் உணர்ச்சிமயமாகப் பேசினான்; சமயங்களில் அவனது பேச்சில் பகைமை உணர்ச்சி ஒலி செய்தது. ஆனால் இந்த மாதிரிக் கடுமை கலகலக்கும் வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு அவனது தாய்க்கு நெஞ்சில் பயம்தான் அதிகரித்தது. எனவே அவள் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தன் மகனை நோக்கி மெதுவாகக் கேட்டாள்.

“இதெல்லாம் உண்மையா, பாஷா?”.

“ஆமாம்!” என்று உறுதியோடு பதிலளித்தான் அவன். மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தினால், மனிதர்களிடையே உண்மையைப் பரப்பியவர்களைப் பற்றியும் அப்படிச் செய்தவர்களை மக்களின் எதிரிகள் மிருகங்களைப் போல வேட்டையாடி, சிறையில் தள்ளியதையும் சித்திரவதை செய்ததையும் அவன் தாயிடம் சொன்னான்.

“நான் அந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் இந்த உலகம் செழித்து வளர்வதற்கான உரம்!” என்று ஆர்வத்தோடு கத்தினான் பாவெல்.