பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

மக்சீம் கார்க்கி


இந்த வார்த்தையைக் கேட்டதும் தாயின் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷ நேரங்களில் மீண்டும் அவர்கள் மூவரும் அந்தப் பயணத்தைப்பற்றி உற்சாகத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

15

அருணோதயப்பொழுதில், இலையுதிர்காலத்து மாரியால் அரித்துச்செல்லப்பட்ட பாதை வழியாகச் செல்லும் தபால் வண்டியில் தாய் ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தாள், ஈரம் படிந்த காற்று வீசியது; எங்கும் சேறு தெறித்துச் சிதறியது. வண்டிக்காரன் தனது பெட்டியடியிலிருந்து லேசாக முதுகைத் திருப்பி வளைத்துத் தாயைப் பார்த்து மூக்கில் பேசத்தொடங்கினான்:

“நான் என் சகோதரனிடம் சொன்னேன். தம்பி, நாம் பாகம் பிரித்துக்கொள்ளுவோம் என்றேன். ஆமாம். நாங்கள் பாகம் பிரிக்கப் போகிறோம்.....”

திடீரென்று இடது பக்கத்துக் குதிரையைச் சாட்டையால் சுண்டியடித்துவிட்டு, அவன் கோபத்தோடு கூச்சலிட்டான்:

“இடக்கா பன்ணுகிறாய்? மாய்மாலப் பிறவியே!”

இலையுதிர் காலத்தின் கொழுத்த காக்கைகள் அறுவடையான வயல் வெளிக்குள் ஆர்வத்தோடு இறங்கின; அச்சமயம் எங்கு பார்த்தாலும் குளிர்காற்று ஊளையிட்டு விசீற்று. காற்றின் தாக்குதலைச் சமாளிப்பதற்காக அந்தக் காக்கைகள் தம்மைச் சுதாரித்துக்கொண்டன. அந்தக் காற்றோ அவற்றின் இறக்கைகளை உலைத்து விரித்துப் பிரித்தது. எனவே அந்தப் பறவைகள் தமது இறக்கைகளையடித்துக்கொண்டு வேறொரு இடத்துக்கு மெதுவாய்ப் பறந்து சென்றன.

“ஆனால் என் தம்பியோ என் உயிரை எடுக்கிறான். என் சொத்து முழுவதையும் உறிஞ்சிப் பிடுங்கிவிட்டான். ஆகக்கூடி, இப்போது நான் அடையக்கூடிய சொத்துப் பத்துக்கள் எதுவுமே இல்லை....” என்று பேசிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

அவனது பேச்சைக் கனவில் கேட்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். அவளது நினைவு மண்டலத்தில், கடந்த சில வருஷ காலமாக நடந்தேறிய சம்பவங்கள் வழிந்தோடின; அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் தானும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதையும் அவள் கண்டாள். இதற்கு முன்பெல்லாம் வாழ்க்கை எங்கோ வெகு தொலைவில், யாருக்கும் காரண காரியம் தெரியாத