பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

385


"எனக்குத் தெரியாது....”

“அவன் என்ன பண்ணினான்?”

“அதுவும் தெரியாது” என்றாள் அந்த யுவதி: “அவனைப் பிடித்துவிட்டார்கள் என்பதை மட்டும் நான் கேள்விப்பட்டேன். இந்தக் கிராமச் சாவடிக் காவலாளி போலீஸ் தலைவனை அழைக்கப் போயிருக்கிறான்.”

தாய் ஜன்னல் வழியாகப் பார்த்தாள், அந்தச் சதுக்கத்தில் முஜீக்குகள் குழுமிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அமைதியாகவும் மெதுவாகவும் வந்தார்கள், சிலர் அவசர அவசரமாகத் தங்களது கம்பளிக் கோட்டின் பொத்தான்களை அரைகுறையாக மாட்டிக்கொண்டே ஒடி வந்தார்கள். அந்தச் சாவடி முகப்பில் கூடி நின்று இடது புறத்தில் எங்கோ ஒரு திசையை ஏறிட்டு நோக்கினார்கள்.

அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். பிறகு கதவை பலமான சத்தத்துடன் மூடிவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிச்சென்றாள். அச்சத்தம் கேட்டு தாய் நடுங்கினாள். தனது டிரங்குப் பெட்டியை பெஞ்சுக்கடியில் இன்னும் உள்ளே தள்ளிவைத்தாள். பிறகு அவள் தலைமீது ஒரு துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு ஓடிச்செல்லவேண்டும் என்ற காரண காரியம் தெரியாத ஆவலை உள்ளடக்கிக்கொண்டு, வாசல் பக்கமாக விரைந்து வந்தாள்.

அவள் அந்தக் கட்டிட முகப்புக்கு வந்தவுடன், அவளது கண்களும் மார்பும் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தன. அவளுக்கு மூச்சுவிடவே திணறியது. கால்கள் கல்லைப் போல் உயிரிழந்து நின்றன. அந்தச் சதுக்கத்தின் வழியாக ரீபின் வந்தான். அவனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அவனுக்கு இரு புறத்திலும் தங்கள் கைகளிலுள்ள தடிகளால் தரையில் தட்டிக்கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டம் அமைதியோடு வாய் பேசாமல் அந்தக் கட்டிட முகப்பிலேயே காத்து நின்றது.

திக்பிரமை அடித்துத் திகைத்து நின்ற தாயால், தன் கண்களை அந்தக் காட்சியிலிருந்து அகற்றவே முடியவில்லை. ரீபின் ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். அவனது குரலை அவள் கேட்டாள். என்றாலும் சூனிய இருள் படர்ந்த அவளது இதயத்தில் அந்த வார்த்தைகள் எந்த எதிரொலியையும் எழுப்பவில்லை.

அவள் ஆழ்ந்த பெரு மூச்செடுத்துத் தன்னை சுதாரித்துக் கொண்டாள். நீலக் கண்களும் அகன்ற அழகிய தாடியும் கொண்ட ஒரு முஜீக் முகப்பு வாசலில் நின்றவாறே அவளைக் கூர்ந்து கவனித்துக்-