பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

மக்சீம் கார்க்கி


“பாருங்கள், நல்லவர்களே!....”

“சத்தம் போடாதே!” அந்த ஜார்ஜெண்ட் அவன் காதோடு ஓங்கியறைந்தான். பின் தடுமாறிச் சாய்ந்து, கீழே விழாமல் சுதாரித்து நின்றான்.

“ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள்....”

“போலீஸ்! இவனைக் கொண்டு போங்கள். ஏ, ஜனங்களே. சீக்கிரம் கலைந்து போங்கள்!” வாயிலே கறித்துண்டைக் கவ்விக்கொண்டு தாவுகின்ற நாய்மாதிரி அந்த ஸார்ஜெண்ட் ரீபினுக்கு முன்னால் பாய்ந்து சென்று அவனது முகத்திலும், நெஞ்சிலும், வயிற்றிலும் தன் முஷ்டியால் ஒங்கி ஓங்கிக் குத்தினான்.

“அடிப்பதை நிறுத்து!” என்று யாரோ கூட்டத்தினரிடையேயிருந்து கத்தினார்கள்.

“நீ ஏன் அவனை அடிக்கிறாய்?” என்று மற்றொரு குரல் அதை ஆமோதித்து ஒலித்தது.

“நாம் போய்விடுவோம்” என்று அந்த நீலக்கண் முஜீக் தலையை அசைத்துக்கொண்டே தன் தோழனிடம் சொன்னான். பிறகு அவர்கள் இருவரும் அந்தச் சாவடியை நோக்கி மெதுவாக நடந்தார்கள். அவர்கள் போகும்போது தாய் அவர்களை அன்பு நிறைந்த கண்களோடு பார்த்தாள். அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட் மீண்டும் சாவடியின் முகப்பை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும் தாய்க்கு நிம்மதி நிறைந்த பெருமூச்சு வெளிப்பட்டது. அங்கு வந்து நின்று வெறிபிடித்த குரலில் அவன் கத்தினான்.

“கொண்டு வாருங்கள் அவனை! நான் பார்த்துக் கொள்கிறேன்....”

“அப்படிச் செய்யாதே” என்று கூட்டத்திலிருந்து ஒரு பதைத்த குரல் எழுந்தது. அந்தக் குரல் அந்த நீலக்கண் முஜீக்கின் குரல்தான் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். “பயல்களா, அவர்களை விடாதீர்கள்; அவனை உள்ளே கொண்டு போனால் அவர்கள் உதைத்தே கொன்று விடுவார்கள், அப்புறம் அந்தக் கொலையை நாம்தான் கெய்தோமென்று நம்மீது. பழியும் சாட்டிவிடுவார்கள். விடாதீர்கள் அவர்களை!”

“விவசாயிகளே!” என்று கத்தினான் ரீபின், “உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நீங்கள் இன்னும் காணவில்லையா? உங்களை எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள், எப்படி ஏமாற்றுகிறார்கள், எப்படி உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள் என்று உங்களுக்குப்-