பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

389


புரியவில்லையா? எல்லாம் உங்கள் சக்தியால்தான் இயங்குகின்றன. நீங்கள்தான் இந்தப் பூலோகத்திலேயே சிறந்த மகோன்னத சக்தியாக விளங்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன? பட்டினி கிடந்து சாவதற்குத்தான் உங்களுக்கு உரிமை இருக்கிறது!”

திடீரென்று அந்த முஜீக்குகள் ஒருவருக்கொருவர் குறுக்கிட்டுச் சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

“அவன் உண்மையைத்தான் சொல்கிறான்!”

“போலீஸ் தலைவனைக் கூப்பிடு. எங்கே அவள்”

“போலீஸ் ஸார்ஜெண்ட் அவனைத் தேடிப் போயிருக்கிறாள்.”

“யார். அந்தக் குடிகாரனா?”

“அதிகாரிகளைக் கூப்பிட்டு வருவது நம் வேலையல்ல.”

அந்தக் கூச்சல் அதிகரித்துக்கொண்டிருந்தது.

“முன்னாலே போய்ப் பேசு, உன்னை அடிக்கும்படி நாங்கள் விட்டுக்கொண்டிருக்க மாட்டோம்!”

“அவன் கைகளை அவிழ்த்துவிடு!”

“நீ அகப்படாமல் பார்த்துக்கொள்!”

“இந்தக் கயிறு என் கைகளை உறுத்துகிறது” என்று அமைதியாகச் சொன்னான் ரீபின். என்றாலும் அவனது குரல் மற்றவர்களின் குரல்களுக்கு மேலாக மேலோங்கித் தெளிவோடு ஒலித்தது. “நான் ஒடிப்போக மாட்டேன். முஜீக்குகளே! நான் இந்த உண்மையிலிருந்து ஒளிந்து மறைய முடியாது. அது என் இதயத்திலேயே வாழ்கிறது.

சில மனிதர்கள் மட்டும் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று ஒரு புறமாக ஒதுங்கி நின்று ஏதேதோ சொல்லிக்கொண்டும் தலையையாட்டிக் கொண்டும் இருந்தார்கள். கந்தலும் கிழிசலுமாய் உடையணிந்த எத்தனை எத்தனையோ மக்கள் உணர்ச்சி வெறியோடு ஓடோடியும் வந்து குழும ஆரம்பித்தார்கள். அவர்கள் ரீபினைச் சுற்றி கொதிக்கும் கறுத்த நுரை போன்று சூழ்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு காட்டுக்கோழி மாதிரி நிமிர்ந்து நின்று தன் கைகளைத் தலைக்கு மேல் ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான் ரீபின்.

“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”