பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மக்சிம் கார்க்கி


அவனது நெடிய பலம்பொருந்திய உருவத்தை அவள் அன்போடு

ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள்.

“உன் இஷ்டப்படியே நீ வாழப்பா. அதெல்லாம் நான் தலையிடக் கூடிய விவகாரம் இல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது இவ்வளவு தீவிரமாகப் பேசாதே. மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்; பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள். அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள். நீ அதை எடுத்துக்காட்டி, அவர்களைக் குறை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள். உன்னை அழித்தேவிடுவார்கள்’.

அவளது சோகமயமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அவளது மகன் வாசல்படியருகே நின்றான். அவள் பேசி முடித்ததும் அவன் லேசாக நகைத்தான்.

“நீ சொல்வது சரிதான்; மனிதர்கள் கெட்டவர்களாகத் தானிருக்கிறார்கள்” என்றான் அவன். “ஆனால் உலகத்தில் நியாயம் என்று ஒன்று இருப்பதாக நான் அறிந்துகொண்டேனே, அதைப் பார்க்கும்போது இந்த மனிதர்கள் எவ்வளவோ தேவலை!” மீண்டும் அவன் நகைத்தான்; பிறகு சொன்னான் “இதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியாது. சிறு பிள்ளையாயிருக்கும் போது நான் யாரைக் கண்டாலும் பயப்படுவேன். பெரியவனான பிறகு எவரைக் கண்டாலும் வெறுக்கவே செய்தேன். சிலரை அவர்களது படுமோசத்தனத்தைக் கண்டு வெறுத்தேன். ஆனால் மற்றவர்களை அது ஏன் என்று எனக்கே தெரியாது; என்னவோ வெறுக்க வேண்டும் என்பதற்காக வெறுத்தேன். ஆனால் இப்போதோ எல்லாமே எனக்கு வேறுபட்டுத் தோன்றுகிறது. இது நான் மனிதர்களுக்காக அனுதாபப்படுவதால் ஏற்பட்டிருக்கக்கூடும், எப்படியானாலும், மனிதர்கள் மோசமாய் நடந்து கொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணம் அல்ல என்பதை நான் உணர்ந்துகொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்றுவிட்டது....”

அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தன் இதயத்துக்குள் கேட்கும் ஏதோ ஒரு குரலைக் கேட்டது போல் நின்றான். பிறகு அமைதியும் சிந்தனையும் நிறைந்தவாறு அவன் சொன்னான்;

“எனவே-உனக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை இதுதான்”