பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

மக்சீம் கார்க்கி


கூட்டத்தினரிடையே கோபக் குமுறல் முரமுரத்து வெளிப்பட்டது. ஜனங்கள் அந்த அதிகாரியை நோக்கிச் சூழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ இதைக் கண்டுகொண்டான். பின்னால் துள்ளிப் பாய்ந்து. தன் வாளின் கைப்பிடியைப் பற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான்:

“என்ன இது? கலவரம் உண்டாக்கவா பார்க்கிறீர்கள்? ஆ-ஹா-ஹா! அப்படியா சேதி?”

அவனது குரல் உடைந்து கரகரத்து நடுங்கியது. திராணியற்ற சிறு கூச்சலைத்தான் அவனால் வெளியிட முடிந்தது. திடீரென்று அவனது குரலோடு அவனது பலமும் பறந்தோடிப் போய்விட்டது. தலையைத் தோள் மீது தொங்கவிட்டபடி அவன் தடுமாறி நிலைகுலைந்து கால்களாலேயே வழியை உணர்ந்து உயரிற்ற கண்களால் வெறித்துப் பார்த்தவாறே பின் வாங்கினான்.

“ரொம்ப நல்லது” என்று அவன் கரகரத்த குரலில் சத்தமிட்டான். “அவனைக் கொண்டு போங்கள் — நான் அவனை விட்டுவிடுகிறேன். வாருங்கள், ஆனால் அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார் அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டிவிடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

தாய் கொஞ்சங்கூட அசையாமல் நின்றாள். அவளது கண்கள்கூட இமைக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கும் சக்தியையும் பலத்தையும் இழந்து போய் பயமும் அனுதாபமும் பீடித்த மனதோடு அவள் ஒரு கனவு நிலைட்பில் நின்றுகொண்டிருந்தாள். முறைப்பும் கோடமும் புண்பட்ட மக்களின் குரல்கள், கலைக்கப்பட்ட தேனீக்களின் மூர்க்க ரீங்காரத்தைப் போல் கும்மென்று அவள் காதுகளில் இரைந்தன. அந்த அதிகாரியின் குழறிய குரல் அவள் காதில் ஒலித்தது. அத்துடன் யாரோ குசுகுசுவெனப் பேசும் குரலும் சேர்ந்தது.

“அவன் குற்றவாளியென்றால், அவனை நீதி மன்றத்திற்குக் கொண்டு போ.....”

“எஜமான்! அவன் மீது கருணை கொள்ளுங்கள்......”

“இதுதான் உண்மை. இந்த மாதிரி நடத்துவதற்கு எந்தச் சட்டமும் இடங்கொடுக்காது.”

“இது என்ன நியாயமா? இப்படி எல்லோரும் அடிக்கத் தொடங்கி விட்டால்,—அப்புறம் என்ன நடக்கும்?”