பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

401


ஸார்ஜெண்டோ மாடி மேலே போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகக் குடித்து மயங்கிக் கிடந்தான். இன்னும் குடிக்கக் கேட்டான். ஒரு பெரிய சதிக் கூட்டமே இருக்கிறதாம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தாடிக்கார மனுஷன்தான் தலைவனாம். மூன்று பேர்களைப் பிடித்தார்களாம். ஒருவன் தப்பியோடிவிட்டானாம். இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரையும் அவர்கள் பிடித்திருக்கிறார்களாம். இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதாம்; தேவாலயங்களைக் கொள்ளையடிக்கும்படி மற்றவர்களைத் தூண்டி விடுகிறார்களாம். இவர்கள் இப்படிப்பட்ட ஆசாமிகள்தானாம். எங்கள் கிராமத்து முஜீக்குகள் சிலர் இவர்களுக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் இவர்களுக்கு இத்தோடு சமாதி கட்டிவிடவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த மாதிரியான கேவல புத்தி படைத்த முஜீக்குகள் இங்கே அதிகம் பேர் இருக்கிறார்கள்!”

அந்தப் பெண்ணின் தொடர்பிழந்த படபடக்கும் பேச்சைத் தாய் கவனமாகக் கேட்டாள். அதைக் கேட்டு தனது பயத்தையும் பீதியையும் போக்கி வெற்றி காண முனைந்தாள். தனது பேச்சைக் கேட்பதற்கும் ஓர் ஆள் இருக்கிறது என்ற உற்சாகத்தில் அந்தப் பெண் உத்வேகமும் உவகையும் பொங்கித் ததும்ப, ரகசியமான குரலிலேயே பேசத் தொடங்கினாள்:

“இதெல்லாம் வெள்ளாமை விளைச்சல் சரியாக இல்லாததால்தான் ஏற்படுகிறது என்று எங்கள் அப்பா சொல்கிறார், இரண்டு வருஷ காலமாய் இங்கே நிலத்திலே எந்த விளைச்சலும் கிடையாது. இதனால்தான் இத்தகைய முஜீக்குகள் தோன்றுகிறார்கள். கிராமக் கூட்டங்களில் அவர்கள் சண்டைப்பிடிக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள். ஒரு நாள் வசுகோவ் என்பவன் பொருள்களை. அவன் வரி கட்டவில்லை என்பதற்காக ஏலம் போட்டார்கள். அவனோ “இதோ உன் வரி” என்று சொல்லிக்கொண்டே நாட்டாண்மைக்காரரின் மூகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறான்.”

வெளியே பலத்த காலடியோசை கேட்டது. தாய் மேஜையைப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

அந்த நீலக்கண் முஜீக் தனது தொப்பியை எடுக்காமலே உள்ளே வந்தான்:

“உன் பெட்டி: எங்கே?”

அவன் அதை லேசாகத் தூக்கி ஆட்டிப் பார்த்தான்.

“காலிப் பெட்டிதான். சரி, மார்க்கா! இவளை என் குடிசைவரை கூட்டிக்கொண்டு போ.”