பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

403


அவள் கதவைத் தட்டினாள். கதவு திறந்தவுடன் அவள் தன்தலையை உள்ளே நீட்டிச் சத்தமிட்டாள்:

“தத்யானா அத்தை!”

பிறகு அவள் ஓடிப்போய்விட்டாள்.

“போய்வருகிறேன்” என்ற அவளது குரல் இருனூடே ஒலித்தது.

17

தாய் வாசலருகே சென்று தன் கையைக் கண்களுக்கு அருகே உயர்த்திப் பிடித்துக் குடிசைக்குள் கூர்ந்து பார்த்தாள். அந்தக் குடிசையில் கொஞ்சம்தான் இடம் இருந்தது. என்றாலும் கண்ணைக் கவரும் சுத்தத்துடன் இருந்தது. ஓர் இளம் பெண் அடுப்பு மூலையிலிருந்து திரும்பி அவளைப் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டாள். ஆனால் ஒன்றும் பேசாமலே மீண்டும் திரும்பிவிட்டாள். மேசைமீது ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

வீட்டுச் சொந்தக்காரனான அந்த முஜீக் மேஜையருகே உட்கார்ந்து தனது கை விரல்களால் மேஜைமீது தாளம் போட்டுக் கொண்டிருந்தான், தாயின் கண்களையே அவன் வெறித்துப் பார்த்தான்.

“உள்ளே வாருங்கள்” என்று சிறிது நேரம் கழித்துச் சொன்னான் அவன். “தத்யானா, போய் பியோத்தரை வரச்சொல்லு. சீக்கிரம் போ.”

அந்தப் பெண் தாயை ஏறிட்டுப் பார்க்காமல் வெளியே சென்றாள். தாய் அந்த முஜீக்குக்கு எதிராக ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சுற்று முற்றும் கண்ணைத் திருப்பினாள். அவளது டிரங்குப் பெட்டியை அங்கு எங்கும் காணவில்லை. அந்த அறை முழுவதிலும் ஒரு பயங்கர அமைதி நிலவியது. இடையிடையே விளக்குத் திரி பொரிந்து விழுவதைத் தவிர வேறு சத்தமே இல்லை. ஒருவித அக்கறையோடு நெரித்து நோக்கும் அந்த முஜீக்கின் முகம் தாயின் கண் முன்னால் மங்கலாக நிழலாடியது. அவளது மனத்தில் அதே கணத்தில் ஒரு பெருங் குழப்பவுணர்ச்சி லேசாக முளைவிட்டது.

“என் பெட்டி எங்கே?” என்று திடீரென்று உரத்த குரலில் கேட்டாள், அந்தக் கேள்வி அவளுக்கே திடுமென்று ஒலித்தது.

அந்த முஜீக் தன் தோள்களைக் குலுக்கினான்.

“அது ஒன்றும் தொலைந்து போகாது” என்று அவன் கூறினான். பிறகு தணிந்த குரலில் பேசினான்: “கடையிலேயேதான் அது காலியாயிருக்கிறது என்று அந்தப் பெண்ணின் காதில் விழும்படி நான்