பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

மக்சீம் கார்க்கி


வேண்டுமென்றுதான் சொன்னேன். அது காலியாய் ஒன்றுமில்லை, ரொம்பக் கனமாக இருக்கிறது.”

“சரி, அதனால் என்ன?” என்று கேட்டாள் தாய்.

அவன் எழுந்து தாயிடம் வந்து குனிந்து நின்று ரகசியமாகக் கேட்டான்;

“அந்த மனிதனை உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?”

“ஆமாம்.” அந்தக் கேள்வி அவளை வியப்புறச் செய்தது. எனினும் அவள் உறுதியான குரலில்தான் பதில் சொன்னாள். அந்தச் சிறு வார்த்தை. அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கி, இதயத்தில் மூண்டிருந்த இருளையும் போக்கியது. பெஞ்சின் மீது அசையாது உறுதியோடு உட்கார்ந்தாள்.

அந்த முஜீக் பல்லைக்காட்டிப் புன்னகை புரிந்தான்.

“நீங்கள் அங்கே இருந்து அவனுக்குச் சைகை காட்டியதைப் பார்த்ததுமே நான் ஊகித்துக்கொண்டேன். அவனும் பதிலுக்குச் சைகை காட்டினான். அவனிடம் நான் ரகசியமாகக் கேட்டேன். ‘அதோ வாசல் முகப்பில் நிற்கிறாளே, அவளை உனக்குத் தெரியுமா’ என்று கேட்டேன்.”

“அதற்கு அவன் என்ன பதில் சொன்னான்?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் தாய்.

“அவனா? ‘எங்கள் கோஷ்டியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என்றான் அவன்.”

அந்த முஜீக் எதையோ கேட்கும் பாவனையில் அவளது கண்களையே கூர்ந்து நோக்கினான். மீண்டும் புன்னகை புரிந்துவிட்டுப் பேசத்தொடங்கினான்.

“ஒரு பலசாலியான தைரியமான ஆசாமி கிடைத்திருக்கிறான். ‘நான் தான்’ என்று. அவன் எவ்வளவு தைரியமாகச் சொல்கிறான். அவர்கள் அவனை எவ்வளவுதான் அடிக்கட்டுமே தான் சொல்ல விரும்பியதை அவன் சொல்லியே தீர்க்கிறான்.”

அவனது குரலைக் கேட்டுத் தாய்க்கு வர வர மனப்பாரம் குறைந்து வந்தது. அவனது குரல் பலமற்றும் நிச்சயமற்றும். அவனது கள்ளமற்ற கண்களின் பார்வையால் அவளுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. அவளது பயபீதியும் கலக்கமும் மறைந்து அவளது மனத்தில் ரீபினின் மீது ஓர் ஆழ்ந்த பரிவுணர்ச்சி இடம் பெற்றது.

“மோசக்காரர்கள்! மிருகங்கள்!” என்று கசப்பு நிறைந்த ஆக்ரோஷத்தோடு கத்தினாள்; உடனே அழ ஆரம்பித்துவிட்டாள்.