பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

405


அந்த முஜீக் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்று சென்றான்.

“இதோ, அதிகாரிகள், தமக்கு நல்ல நண்பர்களைத் தயாரித்துக்கொண்டார்கள்!”

அவன் மீண்டும் தாயை நோக்கித் திரும்பி அமைதியாகச் சொன்னான்:

“அந்த டிரங்குப் பெட்டியிலே பத்திரிகைகள் தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. என் ஊகம் சரிதானே?”

“ஆமாம்” என்று தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னாள் தாய். “நான்தான் அவனுக்குக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தேன்.”

அந்த முஜீக் தன் முகத்தைச் சுழித்தான். தாடியைக் கையில் இறுகப் பற்றிப் பிடித்தவாறு ஒரு மூலையையே வெறித்து நோக்கினான். கடைசியாகப் பேசத் தொடங்கினான்.

“அவை எங்களுக்கும் கிடைத்து வந்தன. புத்தகங்களும் கிடைத்து வந்தன. அந்த மனிதனை எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவனைப் பார்த்திருக்கிறோம்.”

அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஒரு கணம் சிந்தித்தான்.

“அதை வைத்துக்கொண்டு - அந்த டிரங்குப் பெட்டியை வைத்துக்கொண்டு - இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.

“உங்கள்வசம் ஒப்புவித்துவிட்டுப் போகிறேன்” என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னாள் தாய்.

அவன் மறுதலிக்கவில்லை; வியப்புணர்ச்சியையும் காட்டவில்லை.

“எங்களிடம்?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

சொன்னதை ஏற்றுக்கொண்ட பாவனையில் அவன் தலையை அசைத்தான்; மேஜையருகே உட்கார்ந்து, தனது தாடியைக் கைவிரல்களால் சிக்கெடுக்க ஆரம்பித்தான்.

ரீபினுக்கு இழைக்கப்பட்ட மிருகத்தனமான கொடுமையைக் கண்ட காட்சி தாயின் மனத்தில் அழுத்தந் திருத்தமாகப் பதிந்து நினைவிலெழுந்து அவளைப் பயமுறுத்தியது. அந்த உருவம் அவளது மனத்தில் குடிகொண்டிருந்த எண்ணங்கள் யாவற்றையும் விரட்டியோட்டியது. அந்த மனிதனுக்காக வேதனையும் மனத்தாங்கலும் அவள் இதயத்தை நிரப்பின. எனவே அவள் டிரங்குப் பெட்டியைப்