பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

மக்சீம் கார்க்கி


பற்றியோ வேறு எதையும் பற்றியோ சிந்திக்கச் சக்தியற்றுப்போனாள். அவளது கண்ணீர் தாரை தாரையாகத் தங்கு தடையற்று வழிந்திறங்கியது. அவளது முகம் சுண்டிக் கறுத்தது. ஆனால் தடுமாறாத குரலிலேயே அவள் பேசினாள்.

“மனிதப் பிறவிகளை இப்படி மண்ணோடு மண்ணாய் இழுத்து உதைத்துக் கொள்ளையிடும் பாவத்துக்கு அவர்கள் என்றென்றும் நாசமாய்ப் போகட்டும்!”

“அவர்கள் பலசாலிகளாயிற்றே” என்று அமைதியாகச் சொன்னான் அந்த முஜீக். “அவர்கள் மிகுந்த பலசாலிகள்!”

அவர்களுக்கு அந்தப் பலம் எங்கிருந்து வருகிறது?” என்று கலங்கிய குரலில் சொன்னாள் தாய்; “நம்மிடமிருந்துதான், பொது மக்களிடமிருந்துதான் அவர்கள் பலத்தைப் பெறுகிறார்கள். பலத்தை மட்டுமல்ல, எல்லாவற்றையுமே நம்மிடமிருந்துதான் பெறுகிறார்கள்!”

“அந்த முஜீக்கின் பிரகாசமான. ஆனால் புதிர் போடும் முகத்தைக் கண்டு, தாய்க்கு எரிச்சல் வந்தது.

“ஆமாம்” என்று இழுத்தான் அவன்; “இது ஒரு சக்கரம்தான்.....”

திடீரென அவன் உஷாராகி நிமிர்ந்து, வாசல் பக்கமாகச் செவியைச் சாய்த்துக் கேட்டான், “அவர்கள் வருகிறார்கள்” என்றான்.

“யார்?”

“நண்பர்கள்......”

அவனது மனைவி உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னால் இன்னொரு முஜீக் வந்தான். அந்த முஜீக் தன்னுடைய தொப்பியை ஒரு மூலையில் விசிறியெறிந்துவிட்டு, அந்த வீட்டுக்காரனிடம் அவசர அவசரமாக வந்து நின்றான்.

“சரிதானே?” என்று கேட்டான் அவன்.

வீட்டுக்காரன் தலையை அசைத்தான்.

“ஸ்திபான்!” என்ற அடுப்பு முன்னாலிருந்தவாறே கூப்பிட்டாள் அவன் மனைவி, “விருந்தாளிக்குச் சாப்பிட ஏதாவது வேண்டுமா?”

“ஒன்றும் வேண்டாம். மிகுந்த நன்றி, அம்மா” என்றாள் தாய்.

இரண்டாவதாக வந்த முஜீக் தாயிடம் வந்து உடைந்த குரலில் பரபரப்போடு பேசினான்;

“என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். என் பெயர் பியோத்தர் இகோரவிச் ரியபீனின், பட்டப் பெயர் ‘தமர் உளி.’ உங்கள்