பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மக்சீம் கார்க்கி


பூராவுமே நான் பயந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆத்மாவே பயத்திலேயேதான் வளர்ந்து வந்திருக்கிறது’.

‘என்னை மன்னித்துவிடு. இதைத்தவிர வேறு வழி கிடையாது’ என்று மெதுவாகவும், மென்மையாகவும் சொன்னான் அவன்.

பிறகு அவன் போய்விட்டான்.

மூன்று நாட்களாக அவளது இதயம் துடியாய்த் துடித்தது. தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும்போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்......

சனிக்கிழமையன்று மாலையில் பாவெல் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு வந்தான்; முகம் கை கழுவினான். உடைகளை மாற்றினான். உடனே வெளியே கிளம்பிச் செல்லும் பொழுது சொன்னான்.

“யாராவது வந்தால், நான் இதோ வந்துவிடுவேன் என்று சொல்”. என்று தாயின் முகத்தைப் பார்க்காமலே சொன்னான் அவன், “நீ தயவுசெய்து பயப்படாமல் இரு”.

அவள் சோர்ந்துப்போய் ஒரு பெஞ்சில் சரிந்து தொப்பென்று உட்கார்ந்தாள். பாவெல் அவளை உம்மென்று பார்த்தான்.

“வேண்டுமானால், நீ வேறு எங்கேயாவது போய் இரு', என்று யோசனை கூறினான் அவன்.

அவனது பேச்சு அவளைப் புண்படுத்திவிட்டது.

“இல்லை. எதற்காகப் போக வேண்டும்?”

அது நவம்பர் மாதத்தின் இறுதிக்காலம். பனிபடிந்த பூமியில் ஈரமற்ற வெண்பனி லேசாகப் பகல் முழுதும் பெய்து பரவியிருந்தது. நடந்து செல்கின்ற தன் மகனது காலடியில் அப்பனி நெறுநெறுப்பதை அவளால் கேட்க முடிந்தது. இருட்படலம் ஜன்னல் சட்டங்களின் மீது இறங்கித் தொங்கி வேண்டா வெறுப்பாக நிலைத்து நின்றது. அவள் பெஞ்சுப் பலகையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தாள், வாசலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

அதிசயமான ஆடையணிகளோடு தீய மனிதர்கள் நாலா புறத்திலிருந்து இருளினூடே ஊர்ந்து ஊர்ந்து வருவது போல அவளுக்கு ஒரு பிரமை தட்டியது. அரவமில்லாத கள்ளத்தனமாய்