பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மக்சீம் கார்க்கி


தான் சொல்லும் விஷயத்திலும், தான் அந்த மக்களுக்கு உறதியளிக்கும் விஷயத்திலும் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியது.....

“கஷ்ட வாழ்க்கைக்கு ஆளானவர்கள் அனைவரும், அடக்கு முறையாலும் தேவையாலும் அலைக்கழிக்கப்பட்டு நைந்துபோன மக்கள் அனைவரும், பணக்காரர்களாலும் பணக்காரரின் கைக் கூலிகளாலும் தரையோடு தரையாய் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும்—மக்களின் நலத்துக்காகப் படுமோசமான சித்திரவதைக்கு ஆளாகி, சிறைக்குள்ளே கிடந்து அழிந்துகொண்டிருக்கும் அந்த மக்களோடு, ஒன்று சேர வேண்டும். தங்களைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிதுகூட இல்லாமல் அவர்கள் சகல மக்களுக்கும் சுபிட்சப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், ‘இந்தப் பாதை கரடு முரடானதுதான்’ என்று கூறுகிறார்கள். இந்தப் பாதையில் வரும்படி எவரையும் அவர்கள் நிர்ப்பந்திப்பதில்லை. ஆனால், ஒரு மனிதன் அவர்களோடு போய்ச் சேர்ந்து கொண்டால் அவனே அவர்களை விட்டுப்பிரிந்து செல்லமாட்டான். ஏனெனில், அதுவே சரியான பாதையென்பதையும், அதைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்பதையும் அவன் கண்டுகொள்வான்!”

அவனது மனத்தில் நீண்ட நாளாக இருந்துவந்த ஆசையைஅதாவது அவளே மக்களுக்கு உண்மையைப் போதிக்க வேண்டும் என்னும் அவளது விருப்ப—அன்று நிறைவேற்றிக்கொண்டபோது அவளுக்கு ஒரே ஆனந்தமாயிருந்தது.

“அம்மாதிரி மனிதர்களோடு சேர்ந்து செல்வதைப்பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படவே தேவையில்லை. அந்த மனிதர்கள் அற்பசொற்ப வெற்றியோடு திருப்தியடைய மாட்டார்கள். சகல ஏமாற்றுக்களையும், சகல பேராசைகளையும், சகல தீமைகளையும் ஒழித்துக் கட்டினாலன்றி அவர்கள் தமது இயக்கத்தை நிறுத்தமாட்டார்கள். அனைத்து மக்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரே குரலில், ‘நான் தான் அதிகாரி. நான் தான் சகல மக்களுக்கும் சமமான பொதுவான சட்டதிட்டங்களை உண்டாக்குவேன்’ என்ற கோஷத்தைக் கிளப்புகிறவரையிலும், அவர்கள் ஓய்வு கொள்ள மாட்டார்கள்!”

களைப்புணர்ச்சி தோன்றவே, அவள் பேச்சை நிறுத்திச் சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் பேசியது வீண் போகவில்லை என்ற அமைதியான நம்பிக்கையுணர்ச்சி அவள் உள்ளத்தில் நிரம்பி நின்றது. அந்த முஜீக்குகள் இன்னும் எதையோ எதிர்நோக்கி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். பியோத்தர் மார்பின் மீது கைகளைக்-