பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

415


கட்டியவாறு, கண்களைச் சுருக்கி விழித்தான்; அவனது உதடுகளில் ஒரு புன்னகை உருவாகி அசைந்தது. ஸ்திபான் முழங்கையொன்றை மேஜை மீது ஊன்றி, தனது உடம்பு முழுவதையுமே முன்னோக்கித் தள்ளி, இன்னும் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் இருந்தான். அவனது முகம் இருண்ட பக்கமாக இருந்தது. எனவே அது ஒரு பரிபூரண உருவம் பெற்றதுபோல் தெரிந்தது. அவனது மனைவி தாய்க்கு அடுத்தாற்போல் உட்கார்ந்து முழங்காலின் மீது முழங்கைகளை ஊன்றிக் குனிந்து, தரையையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“இப்படித்தான் இருக்கிறது” என்று அடி மூச்சுக் குரலில் கூறிக்கொண்டே பியோத்தர் மெதுவாகப் பெஞ்சின்மீது உட்கார்ந்தான்.

ஸ்திபான் நிமிர்ந்து உட்கார்ந்து, தன் மனைவியைப் பார்த்தான்; அங்குள்ளவர்கள் அனைவரையுமே அணைத்துக்கொள்ளப் போகிறவன் மாதிரி கைகளை அகல நீட்டினான்.

“இந்த மாதிரி விஷயத்தில் ஒரு முறை தலையைக் கொடுத்துவிட்டால், அப்புறம், அதற்காகவே தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து, முழு மூச்சுடன் ஈடுபடத்தான் நேரும்.....” என்று ஏதோ நினைவிலாழ்ந்தபடி கூறத்தொடங்கினான் அவன்.

“ஆமாம் உண்மைதான் திரும்பிப் பார்க்கிற வழக்கமே கூடாது” என்று வெட்கத்தோடு கூறிக்கொண்டான் பியோத்தர்.

“இந்த இயக்கம் பேரளவில் வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது” என்றான் ஸ்திபான்.

“உலகளவில்” என்றான் பியோத்தர்.


18

தாய் சுவரின் மீது சாய்ந்து, தலையைப் பின்னால் சாய்த்து. அவர்கள் சொல்லும் ஆழமும் அமைதியும் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தத்யானா எழுந்திருந்து, சுற்றும் முற்றும் பார்த்தாள்: மீண்டும் உட்கார்ந்துகொண்டாள். அந்த முஜீக்குகளை வெறுப்போடும் கசப்புணர்ச்சியோடும் நோக்கிய அவளது பசிய கண்கள் வறட்சியாகப் பிரகாசித்தன. திடீரென்று அவள் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவோ துயரங்களை அனுபவித்திருக்க வேண்டும்” என்று சொன்னாள்.

“ஆமாம்” என்று பதில் சொன்னாள் தாய்.