பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

மக்சீம் கார்க்கி


“உங்கள் பேச்சு, எனக்குக் கேட்கக் கேட்கப் பிடித்திருக்கிறது, உங்கள் வார்த்தைகள் இதயத்தையே இழுத்து நீட்டுகின்றன. நீங்கள் பேசும்போது நான் எனக்குள் ‘கடவுளே, இவள் பேசுகின்ற மனிதர்களை நான் கொஞ்ச நேரமேனும் பார்க்கக் கொடுத்துவைக்க மாட்டாயா? வாழ்க்கையையே நான் காண மாட்டேனா?’ என்று நினைத்துக் கொள்கிறேன். இங்கு நாங்கள் வாழ்க்கையில் என்னத்தைக் காண்கிறோம்? வெறும் ஆட்டு மந்தையாகத்தான் நாங்கள் இருக்கிறோம். உதாரணமாக, என்னையே பாரேன். எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். புத்தகங்களைப் படிக்கிறேன். எதை எதைப் பற்றியெல்லாமோ சிந்திக்கிறேன். சமயங்களில் சிந்தித்துச் சிந்தித்தே இரவெல்லாம் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனால் என்ன லாபம்? நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டால், ஒன்றுமற்று வாடி வதங்கி நாசமாய்ப் போவேன்; சிந்திப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அதனாலும் எனக்கு எந்தப் பயனும் இல்லை.”

பேசும்போது அவளது கண்களில் கேலி பாவமே பிரதிபலித்தது. சமயங்களில் அவள் தான் பேசும் வார்த்தைகளை ஏதோ ஒரு நூலைக் கடித்துத் துண்டாக்குவது மாதிரி உச்சரித்தாள். அந்த முஜீக்குகள் எதுவும் பேசவில்லை. காற்று ஜன்னல் கதவுகளின் மீது வீசியடித்தது; புகைக் கூண்டு வழியாக லேசாக முணுமுணுத்து வீசியது; வீட்டுக்கூரை மீது சலசலத்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது, எப்போதாவது இடையிடையே மழைத் துளிகள் வேண்டா வெறுப்பாக ஜன்னலின் மீது விழுந்து தெறித்தன. விளக்கின் சுடர் படபடத்துக் குறுகி, அணைவதுபோல் இறங்கியது. மீண்டும் சுடர் வீசி எழுந்து அதிக பிரகாசத்துடன் நிலையாக நின்று எரிந்தது.

“நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது, ‘இதற்காகத்தான் மக்கள் வாழ்கிறார்கள்’ என்று எனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவையெல்லாம் எனக்கே தெரிந்த விஷயங்கள் மாதிரி உணர்ந்தேன். அதுவே எனக்கு ஓர் அதிசயம். ஆனால், இந்த மாதிரி யாரும் அதுவரை பேசி நான் கேட்டதில்லை. நானும் இந்த மாதிரி எண்ணங்களைச் சிந்தித்துப் பார்த்ததில்லை......”

“ஏதாவது சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் விளக்கை அணைப்பது நல்லது. நத்யானா” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மெதுவாகச் சொன்னான் ஸ்திபான், “சமகோவின் வீட்டில் இரவு அகாலம் வரையிலும் விளக்கு எரிவதை ஜனங்கள் கண்டுகொள்ளக்கூடும். அதனால் நமக்கு ஒன்றுமில்லை. ஆனால் நமது விருந்தாளியின் நலத்துக்கு அது உகந்ததல்ல....."