பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தத்யானா எழுந்து அடுப்பருகே சென்றாள்.

“ஆ - மா - ம்” என்று புன்னகை புரிந்தான் பியோத்தர்; “இப்போதெல்லாம் நாம் உஷாராய்த்தானிருக்க வேண்டும். இந்தப் பத்திரிகைகள் ஜனங்கள் மத்தியிலே மீண்டும் தலைகாட்டியவுடனே...”

‘நான் என்னைப்பற்றி நினைக்கவே இல்லை. அவர்கள் என்னைக் கைது செய்துகொண்டு போனாலும், எனக்கு அதனால் பெரிய நஷ்டம் ஏதும் விளையப் போவதில்லை.”

அவன் மனைவி மீண்டும் மேஜையருகே வந்து சொன்னாள்:

“கொஞ்சம் எழுந்திரு.”

அவன் எழுந்திருந்து ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொண்டான்; மேஜையின் எல்லாவற்றையும் அவள் ஒழுங்குபடுத்துவதையே கவனித்துக்கொண்டிருந்தான்.

“சகோதரர்களே—உங்களையும் என்னையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒரு ஐந்து கோபெக்தான் மதிப்பு. ஆமாம். நம்மைப் போன்றோர் நூறுபேர் சேர்ந்தாலும் இப்படித்தான்” என்று கிண்டல் நிறைந்த புன்னகையோடு சொன்னான் அவன்.

தாய் அவனுக்காக வருந்தினாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவனை மேலும் மேலும் அவளுக்குப் பிடித்துப்போயிற்று. தனது பேச்சுக்குப் பிறகு, அன்றைய கோர சம்பவத்தின் மனப்பாரத்தை இறக்கிவைத்த உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் தனக்குத் தானே மகிழ்ந்துகொண்டாள்; எல்லோரும் நல்லபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்து நிரம்பி வழிந்தது.

“தோழனே, நீங்கள் சொல்வது தவறு” என்றாள் அவள். “ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் உங்களை மதிப்பிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது. நீங்கள் உங்களையே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். உங்களது இதயத்துக்குள் இருப்பதைக்கொண்டு, உங்கள் நண்பர்களைக்கொண்டுதான் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிரிகளைக்கொண்டு அல்ல.”

“எங்களுக்கு எந்த நண்பர்கள் இருக்கிறார்கள்?” என்று அந்த முஜீக் மெதுவாகக் கூறினான். “நண்பர்கள—ஒரு வாய் ரொட்டிக்கு நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துச் சண்டை போடுகிறவரையிலும்தான், நண்பர்கள் எல்லாம்!”

“இல்லை. சாதாரண மக்களுக்கும் நண்பர்கள் உண்டு என்று நான்தான் சொல்லுகிறேன்.”