பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

419


“ஏனம்மா எப்படியெப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளவுமா கூடாது?” என்று தன் முழங்காலில் தட்டிக்கொடுத்தவாறே சொன்னான் பியோத்தர், “எப்போது பயப்பட வேண்டும். எப்போது தைரியமாயிருக்க வேண்டும், என்பதையெல்லாம் தெரிந்துதான் வைத்திருக்க வேண்டும். நினைத்துப்பார். அந்தப் பத்திரிகையை வைத்திருந்ததற்காக வாகானவைப் ஜில்லா அதிகாரி என்ன பாடுபடுத்தினார் என்பது உனக்குத் தெரியாதா? அப்புறம் காசுக்காகட்டும், ஆசைக்காகட்டும—அவன் கையிலே ஒரு புத்தகத்தைக்கொடுக்க முடியுமா? கொடுத்தால் வாங்கத் துணிவானா? அம்மா, நீங்கள் என்னைப் பரிபூரணமாக நம்பலாம். நான் என்னவோ கொஞ்சம் அடாபிடிக்காரன். இருந்தாலும், நான் நீங்கள் தரும் பத்திரிகைகளையும் பத்தகங்களையும் ஆள் பார்த்து, இடம் பார்த்து விநியோகிக்கிறேன். எங்கள் ஜனங்களில் பெரும்பாலோர் மிகவும் பயந்தவர்கள், படிப்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், பலமாக மூடிய கண்களைக்கூட, பலவந்தமாகப் பிதுக்கித் திறந்து உண்மையைப் பார்க்கும்படி செய்யும் காலம் வரத்தான் போகிறது. இந்தப் பிரசுரங்கள், விஷயத்தை மிகவும் சுளுவாகச் சொல்லிவிடுகின்றன. விஷயம் இதுதான்: ‘சிந்தித்துப் பார், மூளைக்கு வேலை கொடு;—என்பதுதான். சமயங்களில் படித்தவர்கள் புரிந்துகொள்வதைவிடப் படியாதவர்களே அதிகமாகப் புரிந்து கொள்கிறார்கள். அதிலும் படித்தவர்களுக்குத் தொந்தி விழுந்து சோற்றுக் கவலையில்லாது போய்விட்டால் அவர்களுக்குப் புரியவே புரியாது. இந்த வட்டாரத்தில் நான் எவ்வளவோ பிரயாணம் செய்திருக்கிறேன். எவ்வளவோ பேரைக் கண்டிருக்கிறேன். நாங்கள் எப்படியாவது சமாளித்துக்கொள்கிறோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அகப்பட்டுக் கொள்ளாதவாறு. மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்துகொள்வதற்குக் கொஞ்சம் மூளையைச் செலவழிக்க வேண்டும். அவ்வளவுதான். நிர்வாகிகள் தாங்கள் கத்தி மீது அமர்ந்திருப்பது போலவே உணர்கிறார்கள் எவனாவது ஒரு முஜீக் அதிகாரிகளைக் கண்டு புன்னகை புரிவதையோ, அன்பு காட்டுவதையோ நிறுத்திவிட்டால், அவனது வழக்கத்துக்கு மாறான அந்தத் தன்மையைக் கண்டு, அவன் அதிகாரிகளுக்கு எதிராகச் செல்கிறான் என்று கருதி, அவனை லேசாக மோப்பம் பிடித்துவிடுகிறார்கள், அன்றைக்கு இப்படித்தான் ஸ்மல்ய்கோவோலிலே – அதுவும் பக்கத்துக் கிராமம் — அதிகாரிகள் வரி வசூல் செய்வதற்காக வந்திருந்தார்கள். உடனே அங்குள்ள முஜீக்குகள் கம்பும் தடியும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். போலீஸ் தலைவனுக்கு அதைப்பற்றிக் கொஞ்சம்கூடப் படமில்லை. ‘ஏ, நாய்க்குப் பிறந்த பயலகளா! நீங்கள் ஜார் அரசனுக்கு எதிராகக் கிளம்புகிறீர்கள்!’ என்று ஊளையிட்டான்.