பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பொதுவாக, இது மகத்தான காரியம்!” என்று கூறிக்கொண்டே அவன் தன் கைகளைத் தோய்த்துக்கொண்டான்; மெதுவாகச் சிரித்தான். “கடந்த சில நாட்களில், எனக்குப் பொழுது மிகவும் அருமையாகக் கழிந்தது. முழுநேரமும் தொழிலாளர்கள் மத்தியிலேயே கழிந்தது; அவர்களுக்கு நான் பாடம் சொன்னேன், அவர்களோடு பேசினேன்: அவர்களைக் கண்டுணர்ந்தேன். என் இதயத்திலே ஏதோ ஒரு புனிதமான பரிபூரணமாக வியப்பூட்டும் உணர்ச்சி நிறைந்து ததும்புகிறது. அவர்கள் எவ்வளவு அருமையான மனிதர்கள், நீலவ்னா! நான் வாலிபத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசுகிறேன். அவர்கள் எவ்வளவு பலமும். உணர்ச்சியும் அறிவுத்தாகமும் பெற்றவர்களாயிருக்கிறார்கள்! அவர்களைப் பார்க்கும்போது என்றாவது ஒரு நாள் ருஷ்ய தேசம்தான் உலகிலேயே தலை சிறந்த ஜனநாயக நாடாக விளங்கப்போகிறது என்ற எண்ணம்தான் நமக்கு உண்டாகும்!”

அவன் தன் கூற்றை அழுத்தமாக ஆமோதிப்பதைப்போல், சபதம் எடுப்பதுபோல் கரத்தை நீட்டினான். பிறகு ஒரு கணநேரம் கழித்து மேலும் பேசத் தொடங்கினான்.

“இந்தப் புத்தகங்களோடும் உருவங்களோடும் உட்கார்ந்து உட்கார்ந்து எனக்குப் புளித்தே போய்விட்டது. சுமார் ஒரு வருஷகாலம் இந்த மாதிரி வாழ்க்கையை—பயங்கர வாழ்க்கையை - வாழ்ந்தாயிற்று. நான் தொழிலாளரோடு வாழ்ந்து பழக்கப்பட்டவன். ஆனால், நான் மிகுந்த சிரமத்தோடும், பதனத்தோடும் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போதோ நான் மீண்டும் சுதந்திர புருஷனாக வாழ்கிறேன். நான் இனிமேல் முழு நேரம் அவர்களோடு வாழவேண்டும்; அவர்களோடு உழைக்கவேண்டும். நான் சொல்வது புரிந்ததா? இளமை நிறைந்த சிருஷ்டி சக்தியின் முன்னிலையிலே, புதிய சிந்தனைகள் என்னும் பிள்ளைத் தொட்டிலருகேயே நான் வளர்ச்சி பெறவேண்டும். அது அபூர்வமான அழகான வளர்ச்சி, பிரமாண்டமான உணர்ச்சிக் கிளர்ச்சி, அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு மனிதனை இளைஞனாக்குகிறது: பலசாலியாக்குகிறது, அதுவே வாழ்க்கையின் செழிப்பு நிறைந்த மார்க்கம்!”

அவன் ஆனந்தப் பரவசத்தோடும். குழப்பத்தோடும் சிரித்தான். அவனது ஆனந்தத்தைத் தானும் உணர்ந்து அதில் பங்கெடுத்துக்கொண்டாள் தாய்.

“மேலும் - நீங்கள் ஓர் அற்புதமான பிறவி” என்றான் நிகவாய் “எவ்வளவு தெள்ளத் தெளிவாக மக்களைப்பற்றி வருணிக்கிறீர்கள்! எவ்வளவு நன்றாக அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?”