பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

மக்சீம் கார்க்கி


அவன் தாயின் அருகே உட்கார்ந்தான். முதலில் தனது பிரகாசம் பொருந்திய முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக்கொண்டு, தனது உணர்ச்சிக் குழப்பத்தை மறைப்பதற்காக, பிடரி மயிரைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரமே அவன் தாயைத் திரும்பி நோக்கினான். அவளோ தனது அனுபவங்களை ஒன்றுவிடாமல், தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, எளிய வார்த்தைகளால் விவரித்துச் சொன்னாள்.

“பேரதிருஷ்டம்தான்!” என்று வியந்தான் அவன்; “உங்களைச் சிறையில் தள்ளுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன, இருந்தாலும்... ஆமாம், விவசாயிகள் விழிப்புற்று எழத் தொடங்கிவிட்டார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது; அது ஒன்றும் அதிசயமில்லை, இயற்கைதானே! அந்தப் பெண் - அவளை நான் நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.... கிராமாந்திரப் பிரதேசங்களில் உழைப்பதற்கென்று நாம் சில பிரத்தியேக ஆட்களை நியமிக்க வேண்டும். ஆட்கள்! நம்மில் போதுமான ஆட்கள் இல்லையே! நமக்கு நூற்றுக்கணக்கான தோழர்கள் வேண்டும்!”

“பாவெல் மட்டும் வெளியில் இருந்தால் - அந்திரேயும் இருந்தால்!” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் அவளைப் பார்த்தான்; உடனே கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

“நீலவ்னா, நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குச் சிரமம் தருவதாயிருக்கலாம். நான் பாவெலை நன்றாக அறிவேன். அவன் சிறையிலிருந்து தப்பியோடி வரவே மாட்டான். அதுமட்டும் எனக்கு நிச்சயம், அவன் விசாரணைக்குத் தயாராயிருக்கவே விரும்புகிறான். விசாரணையின் மூலம் தனது முழு உருவையும் காட்ட நினைக்கிறான். அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் உதறித் தள்ளமாட்டான், ஏன் தள்ள வேண்டும்? அவன் சைபீரியாவிலிருந்து ஓடி வந்துவிடுவான்.”

தாய் பெருமூச்செறிந்துவிட்டு மெதுவாகக் கூறினாள்:

“ஆமாம். அதெல்லாம் அவனுக்கு நன்றாய்த்தான் தெரியும்...”

“ஹூம்!” என்று தன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டு மறுகணமே சொன்னான் நிகலாய்.

“உங்களுடைய அந்த முஜீக் தோழன் சீக்கிரமே வந்து நம்மைப் பார்ப்பான் என்றே நம்புகிறேன். ரீபினைப் பற்றி விவசாயிகளுக்கு ஒரு துண்டுப் பிரசுரம் எழுதியாக வேண்டும். அவன் இவ்வளவு பகிரங்கமாக வெளிவந்துவிட்டதால், இந்தத் துண்டுப் பிரசுரத்தால் அவனுக்கு எந்தக்-