பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

433


கெடுதியும் விளையாது. நான் இன்றே எழுதிவிடுகிறேன். லுத்மீலா அதைச் சீக்கிரமே அச்சடித்துக் கொடுத்துவிடுவாள்... ஆனால், இந்தப் பிரசுரத்தை அவர்களிடம் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?”

“நான் கொண்டு போகிறேன்.”

“இல்லை; நன்றி! நீங்கள் வேண்டாம்” என்று அவசரமாகச் சொன்னான் நிகலாய். “நிகலாய் வெஸோவ்ஷிகோவால் முடியுமா என்று யோசிக்கிறேன்.”

“அவனிடம் நான் கேட்டுப் பார்க்கட்டுமா?”

“முயன்று பாருங்கள். எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.”

“ஆனால், நான் என்ன செய்வது?”

“கவலைப்படாதீர்கள், உங்களுக்கு வேறு வேலை பார்க்கலாம்.” அவன் எழுத உட்கார்ந்தான். மேஜையைச் சீர்படுத்திக்கொண்டே, அவள் அவனைக் கவனித்தாள். வரிவரியாக வார்த்தைகளை நிரப்பிச் செல்லும் அவனது விரல்களினால் பேனா நடுநடுங்கிச் செல்வதைப் பார்த்தாள். சமயங்களில் அவனது கழுத்துத் தசை நெளிந்து அசைந்தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடியவாறு யோசிக்கும்போது, அவனது மோவாயின் நடுக்கத்தை அவளால் காண முடிந்தது. இது அவளது ஆர்வத்தைப் பெருக்கியது.

“தயாராகிவிட்டது” என்று கூறிக்கொண்டே, அவன் எழுந்தான். “இதோ, இந்தக் காகிதத்தை உடம்பில் எங்கேயாவது மறைத்து வைத்துக்கொள்ளுங்கள்-ஆனால் போலீஸார் வந்து உங்களைச் சோதனை போட ஆரம்பித்துவிட்டால்...”

“அவர்கள் நாசமாய்ப் போக!” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

அன்று மாலையில் டாக்டர் இவான் தனீலவிச் அங்கு வந்தான்.

“இந்த அதிகாரிகளுக்குத் திடீரென்று என்ன கொள்ளை வந்துவிட்டது?” என்று கேட்டுக்கொண்டே அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான் அவன். “நேற்று ராத்திரி அவர்கள் ஏழு வீடுகளைச் சோதனை போட்டிருக்கிறார்கள், சரி. நோயாளி எங்கே?”

“அவன் நேற்று போய்விட்டான்” என்றான் நிகலாய். “இன்று சனிக்கிழமை. அரசியல் வகுப்புக்குப் போகாமால் அவனால் இருக்க முடியவில்லை.”

“அது முட்டாள்தனம், உடைந்துபோன மண்டையோடு அரசியல் வகுப்புக்குச் சென்று உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம்....”