பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

மக்சீம் கார்க்கி


“நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை.”

“ஒருவேளை தான் அடிபட்டிருப்பதைத் தன் தோழர்களிடம் காட்ட வேண்டுமென்று விரும்பினானோ என்னவோ?” என்றாள் தாய்.

“'இதோ என்னைப் பாருங்கள். நான் ஏற்கெனவே ரத்தம் சிந்திவிட்டேன்’ என்று சொல்ல நினைத்தான் போலிருக்கிறது...?”

அந்த டாக்டர் தாயைப் பார்த்தான். போலிக் கடுமையோடு முகபாவத்தை மாற்றி முகத்தைச் சுழித்துக்கொண்டு சொன்னான்:

“அடேடே! நீங்கள் எவ்வளவு கல்நெஞ்சுப் பிறவி!”

“சரி இவான் நீ இங்கேயே இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சீக்கிரமே போய்விடு. நாங்கள் ‘விருந்தாளிகளை’ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம், நீலவ்னா, அந்தத் தாளை இவனிடம் கொடுங்கள்.”

“இன்னொரு தாளா?” என்று வியந்தான் டாக்டர்.

“ஆமாம். அதை எடுத்துக்கொண்டுபோய், அச்சாபீசிலே, கொடுத்துவிடு.”

“சரி. நான் அதை வாங்கிக்கொண்டேன்! போய்க் கொடுத்துவிடுகிறேன். வேறு ஏதாவது உண்டா?”

“ஒன்றுமில்லை. வாசல்புறத்தில் ஓர் உளவாளி நின்றுகொண்டிருக்கிறான்.”

“அவனை நானும் பார்த்தேன். என் வீட்டு வாசலிலும் ஒருவன் நிற்கிறான். சரி, வருகிறேன். ஏ, கல்நெஞ்சுக்காரி! நான் வருகிறேன். தோழர்களே. சந்தர்ப்பவசமாக, அந்த இடுகாட்டுச் சம்பவத்தால் நன்மைதான் விளைந்திருக்கிறது. நகர் முழுவதுமே அதைப் பற்றித்தான் பேச்சாயிருக்கிறது. அதைப்பற்றி நீ எழுதிய பிரசுரம் ரொம்ப நல்ல பிரசுரம்; மேலும், அது சரியான சமயத்தில் வெளிவந்துவிட்டது. மோசமான முறையில் சமாதானமாவதைவிட, நல்ல முறையில் சண்டையிட்டுப் பார்ப்பதே மேலானது என்று நான் எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன்.”

“சரிதான். நீ புறப்படு.”

“நீ மிகுந்த தயாள குணமுடையவன் என்று நான் சொல்லமாட்டேன், நீலவ்னா. கை கொடுங்கள். அந்தப் பையன் நிச்சயம் முட்டாள்தனமான காரியத்தைத்தான் செய்துவிட்டான். அவன் எங்கு வசிக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”