பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

மக்சீம் கார்க்கி


தூர எறிந்து, எளிய நெளிந்த வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக முனைந்து முன்னேறுவது போலவும் தாய் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்த மாபெரும் உண்மை. புத்துயிர் பெற்ற அந்தச் சத்தியம். ஒரே மாதிரியாக எல்லோரையும் தன்னிடம் அழைக்கிறது. பேராசை, பொறாமை, பொய்மை என்ற மூன்று ராட்சச மிருகங்கள் தமது வெறிபிடித்த சக்தியினால் உலகம் பூராவையும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வைத்திருப்பதையெல்லாம் தகர்த்து, ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலையை உத்தரவாதம் அளிக்கும்... இந்தக் கற்பனா சொரூபமான எண்ணம் அவளது மனத்தில் ஓர் உணர்ச்சியைக் கிளப்பியது. மற்ற நாட்களைவிட எளிதாக இருந்த அந்த நாட்களில் அவள் விக்ரகத்தின் முன் மண்டியிட்டுத் தொழும்போது அவள் உள்ளத்தில் எம்மாதிரி உணர்ச்சி பொங்கியதோ அம்மாதிரி உணர்ச்சிதான் அவளுக்கு இப்போதும் ஏற்பட்டது. இப்போதோ. அவள் அந்த நாட்களையெல்லாம் மறந்துவிட்டாள். எனினும் அந்த நாட்களில் அவள் மனத்தில் எழுந்த உணர்ச்சி மட்டும் விரிந்து பெருகி, முன்னைவிடக் குதூகலமும் பிரகாசமும் பொருந்தியதாக வளர்ந்து, அவளது இதய பீடத்தின் ஆழத்திலே இடம்பிடித்து, ஒளிமயமான தீபச்சுடராக நின்றெரிந்தது.

“போலீஸ்காரர்கள் வருவதாகத் தெரியவில்லையே!” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

“அவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்றேனே” என்று அவனை விருட்டெனத் திரும்பிப் பார்த்தவாறே சொன்னாள் தாய்.

“உண்மைதான். ஆனால், நீலவ்னா, நேரமாகிவிட்டது. கொஞ்ச நேரமாவதுபடுத்துத் தூங்குங்கள். மிகவும் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு அற்புதமான மனோதிடம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை, இந்த அபாயத்தையும் அயர்ச்சியையும் ரொம்பவும் சுளுவாகத் தாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் தலைமயிர் மட்டும் விறுவிறுவென்று நரை தட்டி வருகிறது. சரி, போய்ப் படுத்துக் கொஞ்ச நேரமாவது களைப்பாறுங்கள்.”

20

சமையலறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டுவதைக் கேட்டு, திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் தாய். கதவைத் தட்டியது யாரோ? எனினும் இடைவிடாது பலத்துத் தட்டிக்கொண்டேயிருந்தார்கள். சுற்றிச் சூழ இருளும் அமைதியும் நிலவியிருந்தன. கதவைத் தட்டும் அந்த பலத்த ஓசை இருளினூடே பயபீதியை நிரப்பியொலித்தது. தாய்