பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

449


தள்ளிவிடுவார்கள். நம்மைப் போன்ற கிழடு கட்டைகளுக்கு வெளியே தாராளமாய் இடம் இருக்கும்! என் மருமகனை அவர்கள் சைபீரியாவுக்கு அனுப்பப்போவதாக ஒரு போலீஸ்காரன் என்னிடம் சொன்னான். செய்வார்கள்-நாய்கள்!”

அவன் நிகலாவிடம் திரும்பி, புகைக்குழாயைத் ‘தம்’ பிடித்து இழுத்துக்கொண்டே, அடிக்கொரு தடவை தரையில் காரித் துப்பிக்கொண்டிருந்தான்.

“அப்படியானால் அவளுக்கு இதில் விருப்பமில்லை. இல்லையா? அது அவள் பாடு, ஒருவன் சுதந்திரமாயிருந்தால்தான், உட்கார்ந்து களைத்துப் போனாலும் கொஞ்ச தூரமாவது நடந்து பார்க்கலாம்; நடந்து நடந்து களைத்துப் போனாலும் கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், அவர்கள் உன்னைக் கொள்ளையடித்தால், கண்ணை மூடிக்கொள். அடித்தால் பட்டுக்கொள். அழாதே. கொன்றால் அப்படியே செத்துப்போ. இது எல்லோருக்கும்தான் தெரியும். என்ன ஆனாலும் சரி, நான் என் சவேலியை வெளியே கொண்டுவரத்தான் போகிறேன். நிச்சயம் கொண்டுவந்துவிடுவேன்.”

அவன் அந்தச் சின்னஞ்சிறு வாக்கியங்களைச் சொன்ன விதத்தைக் கண்டு தாய் வியப்படைந்தாள், இறுதி வார்த்தைகளால் ஒருவிதத்தில் பொறாமை உணர்ச்சிகூட ஏற்பட்டது.

தெருவழியாகக் குளிர்க்காற்றிலும் முகத்தில் அறையும் மழையிலும் நடந்து வரும்போதும்கூட, அவள் நிகலாயைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

“அவன் எவ்வளவு மாறிவிட்டான். எப்படி மாறினான்! நினைத்துப் பார்த்தால்!”

அவள் கோபுனைப் பற்றியும் நினைவு கூர்ந்தாள். பிரார்த்திப்பது போல, தன்னுள் தானே பணிவுடன் நினைத்துக்கொண்டாள்.

“வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல. அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.”

அதே சமயத்தில் அவளது இதயத்தில் மகனைப் பற்றிய சிந்தனையும் நிரம்பியெழுந்தது:

“அவன் மட்டும் சம்மதித்தால்!”