பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

453


“அவனுக்கு ஏன் இதில் விருப்பமில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை...... ”என்றாள் தாய்.

நிகலாய் துள்ளியெழுந்தான். அதற்குள் வாசலில் மணியடித்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“சாஷாவாய்த்தான் இருக்கும் ”என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.

“அவளிடம் இதை எப்படிச் சொல்வது? ”என்று தானும் மெதுவாகக் கேட்டாள் தாய்.

“ஹூம்— ஆமாம்...”

“அவளை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது.”

மீண்டும் மணியடித்தது. ஆனால் இந்தத் தடவை உரத்து ஒலிக்கவில்லை. வாசலில் நிற்கும் ஆசாமி உள்ளே வருவதற்குத் துணியாதது மாதிரி தோன்றியது. நிகலாயும் தாயும் கதவினருகே சென்றார்கள். சமையல் கட்டுக்குள் சென்றவுடன் நிகலாய் ஒருபுறமாக நின்றுகொண்டு சொன்னான்.

“நீங்கள் மட்டும் போவதுதான் நல்லது....”

“அவன் மறுத்துவிட்டானா?” என்று கதவைத் திறந்து விட்டவுடனேயே தாயிடம் தைரியமாகக் கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம்.”

“அவன் இப்படிச் செய்வான் என்று எனக்குத் தெரியும்” என்று வெறுமனே சொன்னாள் சாஷா. எனினும் அவளது முகம் வெளுத்துவிட்டது. அவள் தனது கோட்டுப் பித்தான்களைக் கழற்றினாள்; மீண்டும் அதை மாட்டினாள். அந்தக் கோட்டைத் தன் தோளில் சிறிது நழுவிக்கிடக்குமாறு செய்ய முயன்றாள்.

“மழையும் காற்றும்—பொல்லாத பருவம்!” என்று சொன்னாள் அவள், “அவன் சௌக்கியமா?”

“ஆமாம்.”

“சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறான்” என்று மெதுவாகக் கூறிவிட்டு, தன் கையையே பார்த்துக் கொண்டு நின்றாள் சாஷா.

“நாம் ரீபினை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவன் எழுதியிருக்கிறான் ”என்று அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்காமலேயே கூறினாள் தாய்.