பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மக்சீம் கார்க்கி


“நகரில் சுமார் ஒரு வருஷம் வாழ்ந்தேன். பிறகு ஒரு மாசத்துக்கு முன்னர்தான் உங்கள் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தேன், உங்களுடைய மகனும் வேறு சிலரும் இங்கு அருமையான தோழர்களாயிருக்கிறார்கள். எனவே இங்கேயே கொஞ்ச காலம் இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மீசையை இழுத்து விட்டுக்கொண்டான்.

அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிற்று. தன் மகனைப் பற்றி அவன் கூறிய நல்ல வார்த்தைகளுக்குப் பிரதியாக, தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

ஒரு கோப்பை தேநீர் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டாள்.

“அந்த ஆனந்தம் எனக்கு மட்டும்தானா?” என்று தன் தோளை ஒருதரம் குலுக்கிக்கொண்டே சொன்னான் அவன். “மற்றவர்களும் வரட்டும். அதுவரையில் பொறுத்திருக்கலாம். அப்புறம் நீங்கள் எங்கள் எல்லோருக்குமே தாராளமாகப் பரிமாறலாம்” அவனது பேச்சு மீண்டும் அவளது பயபீதியை நினைப்பூட்டிவிட்டது.

“மற்றவர்களும் இவனைப்போலவே இருந்துவிட்டால்!” என்று அவள் நினைத்தாள்.

மீண்டும் வாசல் புறத்தில் காலடியோசைகள் கேட்டேன. கதவு அவசர அவசரமாக திறக்கப்பட்டது; மீண்டும் அவள் எழுந்து நின்றாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக சமையலறைக்குள் ஒரு இளம்பெண் வந்து சேர்ந்தாள். அவள் சின்னஞ் சிறுசாக, கள்ளங்கபடமற்ற முகத்தோடு இருந்தாள்; அவள் தனது அடர்த்தியான் வெளுத்த கூந்தலை முடித்து பின்னலிட்டிருந்தாள்.

“நான் பிந்தி வந்து விட்டேனா? என்று அவள் மென்மையாகக் கேட்டாள்.

“இல்லை. பிந்தவில்லை ” என்று வாசற் புறமாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் அந்த ஹஹோல். “நடந்தா வந்தீர்கள்?”

“பின்னே? நடந்துதான் வந்தேன். நீங்கள்தான் பாவெல் மிகாய்லவிச்சின் அம்மாவா? வணக்கம். என் பெயர் நதாஷா!”

“உங்கள் தந்தை வழிப் பெயர் என்ன?” என்றாள் தாய.

“வசீலியவ்னா. உங்கள் பெயர்?”

‘பெலகேயா நீலவ்ன.”

“சரி. நாம் அறிமுகமாகிவிட்டோம்”.

“ஆமாம்” என்று ஆசுவாசமாகச் சுவாசித்துவிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே சொன்னாள் தாய்,