பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

455


மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது.”

“ப்பூ!” என்று கையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய், “எனக்குத் தெரிந்த ஒரே உணர்ச்சியெல்லாம்-என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவார்களே என்ற பயம் ஒன்றுதான்!”

“என்றுமே நீங்கள் யாரையேனும் விரும்பியதில்லையா?”

“எனக்கு நினைவில்லை. விரும்பியதாகத்தான் நினைக்கிறேன். யாரையோ நான் விரும்பத்தான் செய்தேன். ஆனால் ஞாபகம்தான் வரவில்லை.”

அவள் அவனைப் பார்த்தாள், பிறகு எளிமையாக அமைதியான சோக உணர்ச்சியோடு பேசினாள்.

“என் புருஷன் கொடுத்த அடியிலும் உதையிலும் என் கல்யாணத்துக்கு முன்னே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனையுமே நினைவைவிட்டு ஓடிப்போய்விட்டன.”

நிகலாய் மேஜைப் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். தாய் அந்த அறையைவிட்டு ஒரு கணம் வெளியே சென்றாள். அவள் திரும்பி வந்தபோது நிகலாய் அவளை அன்பு ததும்பப் பார்த்தவாறே இனிய அருமையான நினைவுகளில் திளைத்தான்.

“என்னைப் பொறுத்தவரையில் சாஷாவைப்போல் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு. நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன்—அவள் ஓர் அதிசயமான ஆசாமி. அவளைச் சந்தித்தபோது எனக்கு இருபது வயதிருக்கும். அன்றுமுதலே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நான் அவளை அப்போது எப்படி நேசித்தேனோ, அதுபோலவே இப்போதும் நேசிக்கிறேன்—- என் இதயபூர்வமாக, என்றென்றும் பெருந்தன்மையோடு காதலிக்கிறேன்.”

தான் நின்ற இடத்திலிருந்தே அவனது கண்களில் தோன்றும் இனிய தெளிந்த பிரகாசத்தை அவளால் காணமுடிந்தது. அவன் தனது கைகளை நாற்காலிக்குப் பின்னால் கோத்து, தன் கைகளின்மீது தலையைச் சாய்த்திருந்தான். எங்கோ வெகுதொலைவை ஏறிட்டுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்; அவனது பலத்த மெலிந்த உடம்பு முழுவதும் சூரிய ஒளிக்காக ஏங்கித் தவிக்கும் மலரைப்போல் ஏதோ ஒரு காட்சியைக் காணத் தவித்துக்கொண்டிருந்தது.

“நீங்கள் ஏன் அவளை மணந்துகொள்ளக் கூடாது?” என்று கேட்டாள் தாய்.

“அவளுக்குக் கல்யாணமாகி நாலு வருஷங்களாகிவிட்டது.”