பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

457


காட்டிக்கொடுப்பதுபோன்ற மாபெரும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம். நமது கொள்கையை உடைத்தெறிந்து நாசமாக்காமல் நாம் வேறு யாரோடும் அணி வகுத்துச் செல்ல முடியாது; நமது லட்சியம் சின்னஞ்சிறு சில்லரை வெற்றியல்ல, ஆனால் பரிபூரணமான மகோன்னத வெற்றி ஒன்றுமட்டும்தான் என்பதை நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.”

அவனது குரல் உறுதியுடன் தொனித்தது. முகம் வெளுத்தது. கண்கள் வழக்கம்போலவே நமது அமைதியும் அடக்கமும் நிறைந்த சக்தியோடு பிரகாசித்தன. மீண்டும் வெளியே மணி அடித்தது. லுத்மீலா வந்தாள். அவளது கன்னங்கள் குளிரால் கன்றிப்போயிருந்தன. அந்தக் குளிருக்குத் தாங்காத மெல்லிய கோட்டுக்குள்ளே அவளது உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

“அடுத்த வாரம் விசாரணை நடக்கப்போகிறது” என்று கோபத்தோடு கூறிக்கொண்டே, தனது கிழிந்து போன ரப்பர் பூட்சுகளைக் கழற்ற முனைந்தாள் அவள்.

“நிச்சயமாகத் தெரியுமா?” என்று அடுத்த அறையிலிருந்து கத்தினான் நிகலாய்.

தாய் அவளிடம் ஓடிப்போனாள். அவளது இதயத்திலே ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம் பயமா குதூகலமா என்பதை நிச்சயிக்க முடியவில்லை, லுத்மீலா அவளோடு போனாள்.

“எனக்கு நிச்சயமாய்த் தெரியும். தீர்ப்பு நிர்ணயமாகிவிட்ட விஷயத்தைக் கோர்ட்டில் யாரும் மறைத்துப் பேசக்காணோம்” என்று தனது ஆழ்ந்த குரலில் கிண்டல்போலச் சொன்னாள் அவள். “இந்தமாதிரி விஷயத்தை எப்படித்தான் விளங்கிக் கொள்கிறதோ? தனது எதிரிகளிடம் அதிகாரிகளே தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்று அரசு பயப்படுகிறதா? தனது சேவகர்கள் அனைவரது மனத்தையும் கலைத்துச் சீர்குலைப்பதிலேயே தன் சக்தியையும் காலத்தையும் முழுக்க முழுக்கச் செலவழித்துள்ள அரசு, அந்தச் சேவகர்களே யோக்கியர்கள் ஆவதற்குத் தயாராயிருக்கிறார்களா என்று அஞ்சுகிறது.”

லுத்மீலா சோபாவின் மீது உட்கார்ந்தாள்; தனது மெல்லிய கன்னங்களைக் கைகளால் தேய்த்து விட்டுக்கொண்டாள். அவளது கண்களில் ஒரே கசப்புணர்ச்சி பிரதிபலித்தது. அவளது குரலில் வரவரக் கோபம் கனன்று சிவந்தது.

“லுத்மீலா, வீணாய் என் உயிரை விடுகிறீர்கள்?” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முனைந்தான் நிகலாய். “நீங்கள் சொல்வதை அவர்கள் ஒன்றும் கேட்கப்போவதில்லை. உங்களுக்குத் தெரியாதா...”