பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

மக்சீம் கார்க்கி


தனது நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு திக்குமுக்காடும் மூச்சோடு கவனித்துப் பார்த்தாள். தாடியில்லாத ஓர் இளைஞனின் வெளிர் முடித் தலை ஒரு குலுக்குக் குலுக்கியவாறே மேலெழுந்தது. ஆனால் மறுகணமே அது மீண்டும் உள்வாங்கிக்கொண்டது. கூச்சல்கள் உரத்தும் உத்வேகத்துடனும் ஓங்கி ஒலித்தன. விசில்களின் கீச்சுச் சப்தங்களைக் காற்று ஆகாயத்தில் பரப்பி ஒலிக்கச் செய்தது. மிகயீல் சுவரை ஒட்டி நடந்தான். அவன் அதனைக் கடந்து சிறைச்சாலைக்கும், ஊரின் வீடுகளுக்கும் இடையேயுள்ள வெட்டவெளி மைதானத்தைக் கடந்து சென்றான். அவன் மிகவும் மெதுவாகவும் தலையை அதிகமாக நிமிர்ந்தும் நடப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை அந்தச் சமயத்தில் ஒரு முறை பார்க்க நேர்ந்தவர்கள் அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள், அப்படி இருந்தது அந்த முகத்தோற்றம்.

"சீக்கிரம், சீக்கிரம்!” என்று முணுமுணுத்தாள் தாய். சிறைச்சாலைச் சுவருக்கு அப்பால் ஏதோ மோதியறையும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கண்ணாடிச் சில்லுகள் நொறுங்கி விழும் சப்தத்தை அவள் கேட்டாள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் தனது காலைப் பூமியில் அழுத்தி ஊன்றியவாறே குதிரைக் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அடுத்தவன் தன் முஷ்டியை வாயருகே கொண்டுபோய் சிறைச்சாலையை நோக்கிச் சத்தமிட்டான். அவன் சத்தமிட்டு முடிந்த பிறகு அதற்குப் பதில் எதிர்பார்த்துக் காதைத் திருப்பிச் சாய்த்துக் கேட்டான்.

தாய் மிகுந்த சிரமத்தோடு நாலா திசைகளிலும் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே நின்றாள். அவளது கண்கள் எல்லாவற்றையும் பார்த்தன; ஆனால் எதையும் நம்ப மறுத்தன. எந்த ஒரு காரியம் மிகுந்த சிக்கலும் அபாயம் நேரக்கூடிய பயபீதியும் நிறைந்த எண்ணத்தை அவள் மனத்தில் ஏற்படுத்தியிருந்ததோ, அதே காரியம் மிகவும் சுளுவாக எளிதாக சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டது. அதனது துரித சக்தி தாயை ஆட்கொண்டு அவளது புலன்களை மரத்துப்போகச் செய்தது. ரீபின் ஏற்கெனவே மறைந்து சென்றுவிட்டான். ஒரு நெட்டையான மனிதன் நீண்ட கோட்டை அணிந்துகொண்டு தெரு வழியாக நடந்து சென்றான்; அவனுக்கு முன்னால் ஓர் இளம் யுவதி ஒடிக்கொண்டிருந்தாள். மூன்று சிறைக் காவலாளிகள் சிறைச்சாலை மூலையிலிருந்து தாவி ஓடி வந்தார்கள். மூன்று பேரும் தங்கள் வலது கைகளை நீட்டியவாறு ஒருவர் அருகில் ஒருவராக ஓடிவந்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் அவர்களைச் சந்திப்பதற்காக ஓடினாள்; அடுத்தவன் குதிரையைச் சுற்றிச் சுற்றி ஓடியவாறே அதன் முதுகில் ஏறுவதற்கு முயன்றுகொண்டிருந்தான்.