பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

465


கிண்டல் செய்து எதையாவது சொல்வான். எல்லோருமே சூடானவர்கள். எனவே அந்த மாதிரி விசாரித்து இனி நாம் அவர்களைக் காண் முடியாதபடி செய்துவிடுவார்கள்!”

நிகலாய் பதில் பேசாமலே முகத்தைச் சுழித்தான்; தாடியை இழுத்துவிட்டுக் கொண்டான்.

“இந்த மாதிரி எண்ணங்களை என்னால் ஒதுக்கித்தள்ளவே முடியவில்லை” என்று அமைதியாகச் சொன்னாள் தாய். “எனவேதான் இந்த விசாரணை எனக்கு அத்தனை பயங்கரமாய்த் தோன்றுகிறது! அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து அலசி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டால் அதுதான் பயங்கரமாயிருக்கிறது! எனக்குத் தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை. விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது. அதை எப்படிச் சொல்வது என்பதும் தெரியவில்லை.....”

தான் சொல்வதை நிகலாய் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்; அந்த உணர்ச்சியால் தனது எண்ணங்களை வெளியிட்டுச் சொல்வதுகூட அவளுக்குச் சிரமமாயிருந்தது.

24

அவளது பயம் ஒரு துர்நாற்றம் போல் அவளது தொண்டையில் கமறியெழுந்து அவளைத் திணறச் செய்தது. விசாரணை தினத்தன்று, தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் மனப்பாரத்தைச் சுமந்துகொண்டுதான் தாய் நீதிமன்றத்துக்குச் சென்றாள்.

தெருவெல்லாம் சுற்று வட்டாரத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து வந்த, அவளுக்கு அறிமுகமான பல தொழிலாளர்கள் அவளை வரவேற்றார்கள். அவள் வாய்திறந்து எதுவும் பேசாமல் அவர்களுக்குத் தலை வணங்கிக்கொண்டே அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து சென்றாள். நீதி மன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள நடை வழிகளிலும் விசாரணைக்கைதிகளின் உறவினர்கள் கூடிக் குழுமி, தணிந்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு தாய்க்கு அபரிமிதமாகப்பட்டது: அவளுக்கு அது புரியவில்லை. எல்லோரும் ஒரே மாதிரியான சோகத்துக்கு ஆளாகி நின்றார்கள். தாயும் இதை அறிந்திருந்தாள். அதனால் அவளுக்கு மனப்பாரம்தான் அதிகமாயிற்று.

"என் பக்கத்திலே உட்கார்” என்று ஒரு பெஞ்சில் ஒதுங்கி இடம் கொடுத்துக்கொண்டே கூறினான் சிஸோவ்.