பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

மக்சீம் கார்க்கி


அவள் பணிவோடு உட்கார்ந்து, தன் உடுப்பைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது கண் முன்னால் பச்சை, சிவப்புப் புள்ளிகளும், கோடுகளும், மஞ்சள் நாடாக்களும் நடனமிட்டன.

“எங்கள் கிரிகோரியை உன் மகன்தான் இதில் இழுத்து விட்டுவிட்டான்” என்று அவளுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெண் முனகினாள்.

“வாயைமூடு, நதால்யா!” என்று கோபத்தோடு சொன்னான் சிஸோவ்.

தாய் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அவள் தான் சமோய்லவின் தாய். அவளை அடுத்து அவள் கணவன் உட்கார்ந்திருந்தான்; சுமூகமான தோற்றமும், மெலிந்த முகமும், வளர்ந்து பெருகிய சிவந்த தாடியும் வழுக்கைத் தலையுமாகக் காட்சியளித்த அவன் தன் கண்களை நெரித்து ஏறிட்டுப் பார்த்தான்; உள்ளுக்குள் பட்டுக்கொண்டிருந்த சிரமத்தால் அவனது தாடி நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

வெளிப்புறத்திலிருந்து பனி படிந்துள்ள உயர்ந்த ஜன்னல்களின் வழியாக, மங்கிய ஒளி மயக்கம், நீதி மன்றத்துக்குள்ளே பரவி ஒளிசெய்தது. ஜன்னல்களுக்கு மத்தியில் அலங்காரமான முலாம் சட்டத்தில் அமைந்த ஜார் அரசனின் சித்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் இருபுறத்தையும் கருஞ்சிவப்பான ஜன்னல் திரைகள் மடிமடியாகத் தொங்கி மறைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சித்திரத்துக்கு முன்னால் பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜை அந்த ஹாலின் அகலம் முழுவதையுமே வியாபித்துக்கொண்டிருந்தது. ‘கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால் வலதுபுறச் சுவரையொட்டி இரண்டு மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இடது புறத்தில் கருஞ்சிவப்பு துணிவைத்துத் தைக்கப்பட்ட கைநாற்காலிகள் இரு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தங்க நிறப் பித்தான்களைக்கொண்ட பச்சை உடுப்புக்கள் அணிந்த கோர்ட்டுச் சேவகர்கள் வாய் பேசாது முன்னும் பின்னும் வந்து போய்க்கொண்டிருந்தரர்கள். அந்த மப்பும் மந்தாரமும் நிறைந்த சூழ்நிலையில் உள்ளடங்கி ஒலிக்கும் பேச்சுகளும், பற்பல மருந்துகளின் கார்நெடியும் கலந்து நிறைந்தன. இவையெல்லாம்-இந்த வர்ண பேதங்கள், பிரகாசம், குரல்கள், நெடி எல்லாம்-கண்ணையும் காதையும் உறுத்தின; சுவாசத்தோடு இதயத்தில் புகுந்து அர்த்தம் ஒன்றுமற்ற பயவேதனையை நிரப்பின.

திடீரென யாரோ உரத்தக் குரலில் பேசினார்கள். தாய் திடுக்கிட்டாள்.

எல்லோரும் எழுந்து நிற்பதைக் கண்டு அவளும் சிஸோவின் கையைப்பற்றிப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.