பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

467


இடதுபுறமாக இருந்த ஒரு பெரிய கதவு திறந்தது. மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதர் ஆடியசைந்துகொண்டு உள்ளே வந்தார். அவரது சாம்பல் நிறக் கன்னங்களில் மெல்லிய வெள்ளையான கிருதாக்கள் அசைந்து கொடுத்தன. மழுங்கச் செய்யப்பட்ட அவரது மேலுதடு பற்களேயற்ற வாய் ஈறுக்குள் மடிந்துபோயிருந்தது. அவரது மோவாயும் தாடையும் அவரது உத்தியோக உடுப்பின் உயர்ந்த காலர் மீது சாய்ந்து கழுத்தே இல்லாததுபோல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. கொழுத்துத் திரண்ட நெட்டையான வெள்ளை மூஞ்சி இளைஞன் ஒருவன் கைகொடுத்து அவரை மேலேற்றிவிட்டான். அவர்களுக்குப் பின்னால் தங்க நிறக்கரை வைத்துத் தைத்த உத்தியோக உடைகளோடு மூன்று பேர் வந்தார்கள். சாதாரண உடையணிந்து மூன்று பேர் வந்தார்கள்.

அந்த நீண்ட மேஜை முன்னால் அவர்கள் உட்கார்ந்து முடிப்பதற்கே வெகு நேரம் பிடித்தது. அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மழுங்கச் சவரம் செய்து வழவழப்போடு விளங்கும் சோம்பல் முகமுள்ள ஒரு மனிதன் அந்த வயோதிகரின் பக்கம் குனிந்து தனது தடித்த உதடுகளை என்னவோ போல அசைத்துக்கொண்டு, ரகசியமாக ஏதோ சொல்லத்தொடங்கினான். அந்தக் கிழவர் நிமிர்ந்து அவன் கூறுவதை அசையாமல் கேட்டார். அவரது கண்ணாடிக்குப் பின்னால், இரு சிறு புள்ளிகள் மாதிரி தோன்றும் உணர்ச்சியற்ற கண்களைத் தாய் கண்டாள்.

அந்த மேஜையின் ஓரமாகக் கிடந்த எழுதும் சாய்வு மேஜைக்கு அருகே ஒரு நெட்டையான வழுக்கைத் தலை ஆசாமி நின்று கொண்டிருந்தான்; அவன் தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டே தஸ்தாவேஜுக்களைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

அந்தக் கிழவர் முன்புறமாகக் குனிந்து பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவரது பேச்சு தெளிவாக ஒலித்தது, அப்புறம் அந்தப் பேச்சு அவரது மெல்லிய உதடுகளுக்குள்ளாக மடிந்து உள்வாங்கிப் போய்விட்டது.

“விசாரணை தொடங்குகிறேன்........ அவர்களைக்கொண்டு வாருங்கள்...”

“பார்!” என்று தாயை முழங்கையால் இடித்து நிமிர்ந்து நின்றவாறே மெதுவாகச் சொன்னான் சிஸோவ்.

கைதிக் கூண்டுக்குப் பின்புறமுள்ள கதவு திறந்தது. பளபளக்கும் வாளைத் தோளில் சாத்தியவாறே ஒரு சிப்பாய் வந்தான், அவனைத் தொடர்ந்து பாவெல், அந்திரேய், பியோதர் மாசின், கூஸெவ் சகோதரர்கள், சமோய்லவ், புகின், சோமல் முதலியோரும், தாய்க்கு அறிமுகமில்லாத