பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

மக்சீம் கார்க்கி


ஐந்து இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள். பாவெல் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அந்திரேய் பல்லைக்காட்டி, தலையை ஆட்டினான். அவர்களது புன்னகையும், உற்சாகம் நிறைந்த முகங்களும், அசைவுகளும் அந்த நீதிமன்றத்தின் உம்மணா மூஞ்சிச் சூழ்நிலையை மாற்றி, அதைத் தளரச் செய்தது. உத்தியோக உடுப்புகளின் பொன்னொளி ஜாலம் மங்கிப் போயிற்று. தைரியம் மீண்டும் தாயிடம் குடிபுகுந்தது. அந்தக் கைதிகள் தம்மோடு கொணர்ந்த அமைதியான தன்னம்பிக்கையும் ஜீவ சக்தியும் அவளுக்கு வலுவூட்டின. அவளுக்குப் பின்னுள்ள பெஞ்சிகளில், இத்தனை நேரமும் சோர்ந்து அசந்துபோய் நின்ற மக்கள், தங்களுக்குள் குசுகுசுத்துப் பேசத் தொடங்கினார்கள்.

“அவர்கள் பயப்படவே இல்லை!” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான். சமோய்லவின் தாயோ உள்ளுக்குள்ளாகப் பொருமத் தொடங்கினாள்.

“அமைதி” என்று ஒரு கடுமையான குரல் ஒலித்தது.

“முதலிலேயே நான் உங்களை எச்சரித்து விடவேண்டும்...” என்று சொன்னார் அந்தக் கிழவர்.

முன்னாலுள்ள பெஞ்சியின்மீது பாவெலும் அந்திரேயும் ஒருவர் பக்கம் ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களோடு மாசின், சமோய்லவ், கூஸெவ் சகோதரர்கள் முதலியோரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்திரேய் தன் தாடியை எடுத்துவிட்டிருந்தான்; ஆனால் மீசையை மட்டும் வளரவிட்டிருந்தான். அந்த மீசை வளர்ந்து படிந்து அவனது உருண்டை முகத்தைப் பூனைமுகம் மாதிரி காட்டிக்கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. கூர்மையும் குத்தலும் நிறைந்த பாவம் அவனது முகத்தில் தோன்றியது. கண்களில் ஏதோ ஒரு கருமை தென்பட்டது. மாசினுடைய மேலுதட்டில் இரு கரிய கோடுகள் காணப்பட்டன; அவனது முகம் உப்பி உருண்டுகொண்டிருந்தது. சமோய்லவின் சுருட்டைத் தலை எப்போதும் போலவே இருந்தது. இவான் கூஸெவ் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“ஆ! பியோதர்! பியோதர்!” என்று தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தான் கிஸோவ்.

அந்தக் கிழவர் தமது உத்தியோக உடுப்பின் காலருக்குள் அசையாமல் புதைந்து கிடந்த தலையைக் கொஞ்சம்கூட அசைக்காமல், நிமிர்ந்தும் பார்க்காமல் கைதிகளைப் பார்த்து ஏதேதோ கேள்வி கேட்டார், அந்தத் தெளிவற்ற கேள்விக் குரலைத் தாயும் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும்