பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

469


தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்துகொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அந்த நீண்ட மேஜைக்கு எதிரே இருந்தவர்களின் முகத்தைப் பார்த்து விசாரணையின் முடிவை அவள் ஊகிக்க முயன்றாள்; அவளது ஊகத்தால், அவளது இதயத்தினுள்ளே ஒரு நம்பிக்கை வளர்ச்சிபெற்று ஓங்குவதை அவள் உணர்ந்தாள்.

ஒரு வெள்ளை முக ஆசாமி ஒரு தஸ்தாவேஜை உணர்ச்சியற்று ஒரே குரலில் வாசித்தான். மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் மாதிரி அதைக் கேட்ட ஜனங்கள் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.விசாரணைக்காக நிற்பவர்களைப் பார்த்து, நாலு வக்கீல்கள் உணர்ச்சியோடும் அமைதியோடும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அசைவுகள் பலமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன. அவர்கள் பெரிய கரும்பறவைகளைப்போல் தோன்றினார்கள்.

அந்தக் கிழ நீதிபதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஒரு கொழுத்த உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவரது சிறு கண்கள் கொழுத்த சதைப் பகுதிக்குள் புதைந்து போயிருந்தன. இன்னொரு கைப் பக்கத்தில் கூனிய தோள்களும் வெளுத்த முகமும், சிவந்த மீசையும் கொண்ட இன்னொரு உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவர் தமது தலையைச் சோர்வோடு நாற்காலியின் பின்புறம் சாய்த்து கண்களைப் பாதி மூடியவாறே சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசாங்க வக்கீலும் களைப்புணர்ச்சியோடும் எரிச்சலோடும் இருப்பதாகத் தோன்றியது. நீதிபதிகளுக்குப் பின்னால் மூன்று முக்கிய பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள்; ஒருவர் நகரத்து மேயர்—அவர் கனத்துத் தடித்த ஆசாமி; அவர் தமது கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பிரபு வம்சத் தலைவர்—நரைத்த தலையும் சிவந்த கன்னமும், நீண்ட தாடியும், கவர்ச்சிகரமான விசாலமான கண்களும் கொண்டவர் அவர். அடுத்தாற்போல் ஜில்லா அதிகாரி இருந்தார். பெரிய தொந்தியுள்ள ஆசாமி அவர். தொந்தி விழுந்திருப்பது அவருக்கு மனச்சங்கடத்தை உண்டுபண்ணியதுபோல் தோன்றியது. ஏனெனில் அவர் தமது கோட்டினால் அந்தத் தொந்தியை எவ்வளவோ மறைக்க முயன்றும், முடியவில்லை.

“இங்கு கைதிகளும் இல்லை. நீதிபதிகளும் இல்லை!” என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது, “பிடிபட்டவர்களும்

பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்!”