பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

471


விரோதமானது என நான் மதிக்கிறேன். நீங்களெல்லாம் யார்? எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா? இல்லை, அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்!”

அவன் உட்கார்ந்தாள். தனது கன்றிச்சிவந்த முகத்தை அந்திரேயின் தோளுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.

அந்தக் கொழுத்த நீதிபதி பிரதம நீதிபதியை நோக்கித் தலையை அசைத்து, காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். வெளுத்த முகம் கொண்ட நீதிபதி தம் கண்களைத் திறந்து, கைதிகளைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, முன்னாலுள்ள காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார் ஜில்லா அதிகாரி தலையை அசைத்தார்; தமது காலை நீட்டி தொந்தியைத் தொடைமீது சாய்த்து, அதைக் கைகளால் மூடிக்கொண்டார். தனது தலையைத் திருப்பாமலே, அந்தக் கிழ நீதிபதி தமது உடம்பு முழுவதையுமே திருப்பி, அந்த வெளுத்தமுக நீதிபதியைப் பார்த்து அவரிடம் ஏதோ ரகசியம் பேசினார். அந்த உபநீதிபதி அவர் கூறியதை வணங்கிய தலையோடு காதில் வாங்கிக்கொண்டார். பிரபு வம்சத் தலைவர் அரசாங்க வக்கீலிடம் என்னவோ சொன்னார்; அதை நகர் மேயரும் தம் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே கேட்டார்: மீண்டும் அந்தப் பிரதம நீதிபதி மங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

“அவன் அவர்களை வெட்டிப் பேசினான் பார்த்தாயா?” என்று தாயை நோக்கி வியப்போடு கூறினான் கிஸோவ். “அவன்தான் இவர்கள் எல்லோரிலும் கெட்டிக்காரன்!”

அவன் சொன்னதைப் புரிந்துக்கொள்ளாமலேயே புன்னகை புரிந்தாள் தாய். அங்கு நடக்கும் சகல காரியங்களும்,

அவர்களையெல்லாம் கூண்டோடு நசுக்கித் தள்ளும் மகா பயங்கரத்துக்கான, வேண்டாத வீண் அறிகுறிகளே என்று அவள் கருதினாள். ஆனால் பாவெலும் அந்திரேயும் பேசிய பேச்சுக்கள் நீதிமன்றத்தில் பேசுவதுபோல் இல்லாமல், தொழிலாளர் குடியிருப்பில், தமது சிறிய வீட்டுக்குள் பேசிய பேச்சுப்போல் பயமற்றும் பலத்தோடும் ஒலித்தன, பியோதரின் உணர்ச்சிவசமான உத்வேகப் பேச்சைக் கேட்டு அவள் பரபரப்பபடைந்தாள்.. அந்த விசாரணையில் ஏதோ ஒரு துணிந்து காரியசரதனை நடைபெறுவது போல் தோன்றியது. தனக்குப் பின்னாலுள்ள ஜனங்களைப் பார்த்தபோது, அவ்வித உணர்ச்சி தனக்கு மட்டுமே ஏற்படவில்லை. அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுகொண்டாள் தாய்.