பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

மக்சீம் கார்க்கி


“உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று அந்தக் கிழ நீதிபதி கேட்டார்.

அந்த வழுக்கைத் தலை அரசாங்க வக்கீல் எழுந்து நின்றார்; ஒரு கையை மேஜை மீது ஊன்றியவாறே படபடவென்று புள்ளிவிவரங்களை அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார். அவரது பேச்சில் எவ்விதப் பயங்கரமும் இல்லை.

அதே சமயத்தில் ஏதோ ஒரு வறண்ட குத்தலான பயபீதி உணர்ச்சி தாயின் உள்ளத்திலே புகுந்து உறுத்தியது. கையை உயர்த்திக் காட்டாமல், வஞ்சம் கூறிக் கத்தாமல், ஆனால், அதே சமயத்தில் கண்ணுக்குத் தெரியாமல், புலனுக்கும் வசப்படாமல், குமுறி வளர்ந்து வரும் ஒரு வெம்பகை உணர்ச்சி அந்த நீதிமன்ற சூழ்நிலையிலே தொனித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தறிந்தாள். அந்தக் கொடும் பகை நீதிபதிகளின் முன்னிலையிலேயே வட்டமிட்டு அவர்களுக்கு வெளியில் நடைபெறும் காரியங்கள் எதுவும் அவர்கள் மனத்துக்குள் புகுந்து விடாதபடி, அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து சூழ்ந்து கப்பி மூடிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவள் அந்த நீதிபதிகளைப் பார்த்தாள்; அவர்களது பார்வையிலிருந்து அவளால் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் எதிர்பார்த்ததுபோல், அவர்கள் பாவெலின் மீதோ பியோதர்மீதோ கோபம் கொள்ளவில்லை. அவர்களை அவமானப்படுத்திப் பேசவில்லை. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கே அவர்கள் எந்த முக்கியத்துவமும் அளித்ததாகவும் தெரியவில்லை. அவர்களது குரல் விருப்பற்ற குரலாக ஒலித்தது: நமது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் அவர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் கேட்டுத் தீர்த்தார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள் போலவும் எல்லா விஷயத்தையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தவர்கள் போலவும் காணப்பட்டார்கள்.

இப்போது அவர்கள் முன்னால் ஒரு போலீஸ்காரன் வந்தான். ஆழ்ந்த குரலில் சொன்னான்.

“பாவெல் விலாசவ்தான் இவர்களில் பிரதம கிளர்ச்சிக்காரன் என்று சொல்லப்படுகிறது...”

“நயோத்காவைப் பற்றி என்ன?” என்று அந்த கொழுத்த நீதிபதி சோம்பலுடன் கேட்டார்.

“அவனும்...”

ஒரு வக்கீல் எழுந்திருந்தார்.

“நான் ஒரு வார்த்தை சொல்லலாமா?” என்று கேட்டார்.