பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

473


“ஏதாவது மறுத்துக் கூறவேண்டுமா?” என்று பிரதம நீதிபதி கேட்டார்.

அத்தனை நீதிபதிகளும் ஏதோ நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவதுபோல் தாய்க்குத் தோன்றியது. அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் ஏதோ ஒரு சீக்கான அலுப்புணர்ச்சி பிரதிபலிப்பதுபோல் தோன்றியது. முகங்களும் அந்த அலுப்பையும் ஆயாசத்தையுமே பிரதிபலித்தன. அவர்களது உத்தியோக உடைகள், நீதிமன்றம், அரசியல் போலீஸ்காரர்கள், வக்கீல்கள். நாற்காலிகளில் உட்கார்ந்து கேள்வி கேட்பது, அதற்கு வரும் பதில்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியான தேவை எல்லாவற்றையுமே அவர்கள் ஒரு நிர்ப்பந்தவசமான தொல்லையாகத்தான் கருதினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

தாய்க்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான், பாவெலைப்பற்றியும் அந்திரேயைப்பற்றியும் தனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் உரத்தக் குரலில் நீட்டி நீட்டிப் பேசினான்.

“உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால் இருப்பவர்களை அவர்களைப்பற்றிய பயமும் இல்லாமல், அவர்கள் மீது அனுதாபமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்த்தாள் தாய். அவர்கள் மீது அவள் அனுதாபம் கொள்ள முடியாது. அவள் மனதில் அவர்கள் வியப்புணர்ச்சியைத்தான் உண்டாக்கினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவளது உள்ளத்தில் ஓர் அன்புணர்ச்சி அலைபாய்ந்து சிலிர்த்துப் பரவியது. அந்த வியப்புணர்ச்சியோ அமைதியாயிருந்தது. அந்தப் பரவச ஆனந்தம் தெளிவோடிருந்தது. சுவருக்கு எதிராக அவர்கள் உறுதியோடும் இளமையோடும் உட்கார்ந்திருந்தார்கள். சாட்சிகளின் கிளிப்பிள்ளைப் பேச்சையும், நீதிபதிகளையும், சர்க்கார் வக்கீலோடு மற்ற வக்கீல்கள் பேசும் விவாதப் பேச்சுக்களையும்; அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை, இடையிடையே அவர்களில் யாராவது ஒருவன் வெறுப்பாக சிரித்துக்கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து ஏதாவது கிண்டலாகச் சொல்வான். அந்தத் தோழர்களின் முகங்களும் அந்தக் கிண்டலைப் பிரதிபலித்துப் புன்னகை புரிந்தன. குற்றவாளிகளின் தரப்பில் பேசிக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரோடு, பாவெலும் அந்திரேயும் இடையிடையே ஏதேதோ மெதுவாகப் பேசினார்கள். அந்த வக்கீலை முந்தின நாள் இரவு நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்தாள்.