பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

மக்சீம் கார்க்கி


அவனது மனைவி அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள் கண்ணில் தொங்கும் கண்ணீரை அடக்க எண்ணி அவள் கண்ணை மூடி, மூடி விழித்தாள்; கைக்குட்டையால் நாசியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.

“இதுதான் அதிசயம்” என்று தன் தாடியைப் பிடித்துக்கொண்டும். தரைமீது பார்வையை ஊன்றிப் பதித்துக்கொண்டும் பேசத் தொடங்கினான் சமோய்லவின் தந்தை. “இவர்களை இந்தப் பயல்களைப் பார்க்கும்போது, இவர்கள் இந்த மாதிரியான சங்கடத்துக்குள் போய், மாட்டிக்கொண்டதையெண்ணி நம்மால் அனுதாபப்படாமலிருக்க முடியவில்லை. உடனே திடீரென்று நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் பயல்கள் சொல்வதுதான் சரியான உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது” அதிலும் நாளுக்கு நாள் தொழிற்சாலையில் இவர்கள் கூட்டம் பெருத்து வருவதைக் கண்டால், இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. போலீசாரோ அவர்களைப் பிடித்துக்கொண்டுபோன வண்ணமாயிருக்கிறார்கள்; அவர்களோ ஆற்று மீன்களைப்போல பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம்தான் சக்தி இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.”

“ஸ்திடான் பெத்ரோவில் இந்த விவரத்தைப் புரிந்துகொள்வது நம்போன்றவர்களுக்கு முடியாத காரியம்!” என்றான் சிஸோவ்.

“ஆமாம், சிரமமானதுதான்” என்று ஆமோதித்தான் சமோய்லவின் தந்தை.

“போக்கிரிகள்–இவர்களுக்குத்தான் எவ்வளவு சக்தி?” என்று பலத்துச் சிணுங்கிக்கொண்டே கூறினாள் அவனது மனைவி.

பிறகு அவள் தாயின் பக்கம் திரும்பி, தனது தொள தொளத்த அகன்ற முகத்தில் புன்னகை அரும்பப் பேசினாள்:

“நீலவ்னா, என்மீது கோபம் கொள்ளாதே, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான்தான் உன் மகனைக் குறைகூறினேன், ஆனால் யார் குற்றம் அதிகம் என்று எவர் கூறமுடியும்? எங்கள் கிரிகோரியைப் பற்றிப் போலீஸ்காரர்களும், உளவாளிகளும் என்ன சொன்னார்கள் பார்த்தாயா? அவனும் இந்த விவகாரத்தில் தன்னாலானதைச் செய்திருக்கிறான் செந்தலைப் பிசாசு!”

தனது உணர்ச்சியை அவள் உணர்ந்துகொள்ளாவிட்டாலும் அவள் தன் மகனை எண்ணிப் பெருமை கொள்வதாகவே தோன்றியது. எனினும் தாய் அவள் கூறியதைக் கேட்டு மெச்சிக்கொண்டாள். அன்பான